கப்பல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இழப்பீட்டு தொகையிலும் கையாடல் செய்ய தயாராகி வருகின்றனர் - ஐக்கிய மக்கள் சக்தி
விபத்துக்கு உள்ளாகி இருந்த கப்பலை வரவழைத்து முழு கடற்பரப்பையும் அழித்த பின்னர், அதற்காக கிடைக்க உள்ள இழப்பீட்டு பணத்திலும் தரகு பயணம் பெற தயாராகி வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறுவதில் சந்தேகம் இருப்பதாகவும், தீயை அணைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை மாத்திரமே பெற முடியும் எனவும், வெளிநாட்டு காப்புறுதி நிறுவனத்துடன் சில தொடர்புகளை கொண்டுள்ள அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடலில் இப்படியான விபத்துக்கள் ஏற்படும் போது அந்த கடற்பரப்பிற்கு சொந்தமான நாடு பெரியளவில் இழப்பீடுகளை பெற முடியும்.
எனினும் நாட்டில் ஏற்பட்ட விபத்திற்கான இழப்பீட்டை பெறுவதில் கேள்விகளை எழுப்புகின்றனர். இதன் பின்னணியில் உடன்பாடுகள் இருக்கலாம்.
வரலாற்றில் இலங்கையின் கடற்பரப்பில் இப்படியான அழிவு ஏற்பட்டதில்லை. இந்த அழிவுக்கான இழப்பீட்டை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் இதற்கு துணைப்புரிந்த அனைவரையும் சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும்.
எவ்வாறாயினும் குதிரை சென்ற பின்னர் கொட்டடியை மூடும் தரத்திலான தலைவரே இலங்கையில் உருவாகியுள்ளார் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.