இலங்கைக்கு பேரழிவை ஏற்படுத்திய கப்பலின் முக்கிய தரவுகள் வேண்டுமென்றே அழிப்பு
எம்வி எக்ஸ் பேர்ல் (MV X-Press Pearl ) கொழும்புக்கடலில் தீப்பற்றிய பின்னர், அது தொடர்பான முக்கிய மின்னஞ்சல் தகவல்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக, பிரதி மன்றாடியார் நாயகம் மாதவ தென்னகோன், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 மே 19ஆம் திகதியன்று இந்த கப்பல் தீப்பற்றி முழுவதுமாக கடலில் மூழ்கியது.
இலங்கையின் கடலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, தெற்காசியாவிலும் உலக அளவிலும் மிக மோசமான கடல் மாசு சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
தரவு நீக்குதல்
இதன் காரணமாக, இலங்கையில் இதன் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தீவிபத்து தொடர்பான, கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளரினால் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு போன்ற தரவுகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக,பிரதி மன்றாடியார் நாயகம் மன்றில் அறிவித்துள்ளார்.
இது, தனிநபர்களின் நோக்கங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, தரவு நீக்குதலுக்கான பொறுப்பை தீர்மானிக்க முழுமையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கப்பல் தலைவரிடம் இருந்த, போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் கப்பல் தரவு பதிவுக்கருவி ஆகியவற்றின் தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை துறைமுகங்கள்
இதன்படி, கப்பலைக் கையாளும் உள்ளூர் முகவருக்கு, கப்பல் தலைவரால் அனுப்பப்பட்ட பல மின்னஞ்சல்கள், கப்பல் தலைவரின் செய்திகள் உட்பட பல தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன.
கப்பலின் உள்ளூர் முகவர் மற்றும் கப்பலின் தலைவர் ஆகியோருடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையின் போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், கப்பலின் உள்ளூர் முகவரான சரத் ஜயமான்னவை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி, தரவுகளை அழிப்பதில் தனது கட்சிக்காரர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஏனெனில், குறித்த தரவுகள் துறைமுக தலைவர் வசமே இருந்துள்ளன. எனவே, அந்த தரவுகள் அழிக்கப்பட்டதாக கூறுவது இலங்கையின் துறைமுகங்களின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |