தமிழீழ இலட்சியவாதி அ.கௌரிகாந்தன் தமிழகத்தில் மரணம்(Photos)
தமிழீழ விடுதலை பற்றி ஓயாது சிந்தித்தும், எழுதியும் வந்த பொதுவுடமைவாதியான அ.கௌரிகாந்தன் மரணமடைந்துள்ளார்.
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஈழத்தமிழர் ஏதிலி முகாமில் நேற்றிரவு(26.02.2023) இவர் மரணமடைந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பும் தளராத தமிழீழ இலட்சியவாதியும், தமிழிழக் கோட்பாட்டாளர்களில் தன்னுடைய இறுதி மூச்சுவரை விட்டுக்கொடுப்பற்று அந்த இலட்சியத்தையே பேசிய ஒருவராக இவர் திகழ்ந்துள்ளார்.
தமிழீழ இலட்சியவாதி
ஆரம்பகாலத்தில் இடதுசாரியமைப்புகளில் தீவிரமாக செயற்பட்டவர். ஆயுதப்போரட்டம் வளரத் தொடங்கியபோது 1980 களின் ஆரம்பத்தில் புளொட் இயக்கத்திடன் சமூக இயக்கங்களில் பயணித்துள்ளார்.
எனினும் கௌரிகாந்தன் பல்வேறு அமைப்புக்களுடனும் இடதுசாரிக் கொள்கை அடிப்படையிலேயே பயணித்தவராவார்.
1980களின் நடுப்பகுதிக்குப் பின்னர் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களும், இடதுசாரியமைப்புகளும் பொது எதிரியிடம் சரண்டைந்து எதிரியின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்துள்ளார்.
மேலும் 1990 இன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் சமூக இயக்க வேலைகளில் பணியாற்றியுள்ளார்.
அன்றைய காலத்தின் விடுதலைப்போராட்டச் செல்நெறியை செப்பனிடும் பணியை தனது கோட்பாட்டுக்குள் நின்றுகொண்டே செயல்ப்பட்டார்.
தமிழீழ மாணவர் அமைப்பு வெளியிட்ட சாளரம் சஞ்சிகையின் முதுகெழும்பாக செயற்பட்டவர். அச்சஞ்சிகையில் தமிழீழ மாணவர்களுக்கான பல சமூக அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஈழ விடுதலைக்கான நட்பு சக்தி
அக்காலப்பகுதியில் 'சமதர்ம உருவாக்களில் ஓர் பின்னடைவு', 'வயது வந்தோருக்கான சர்வஜன வாக்குரிமையின் சில உண்மை வடிவங்கள்', 'யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்', ஆகிய மூன்று நூல்கள் இவரால் வெளியிடப்பட்டது.
அந்நாட்களில் தமிழீழ நிலப்பரப்புக்கு வெளியே சிங்கள தேசத்தில் ஈழ விடுதலைக்கான நட்புசக்திகளை உருவாக்கும் செயல்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
அதனை நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட தவறுகளால் எதிரியின் பிடிக்குள் அகப்படாமல் தாயகத்துக்குள் மீண்டு சென்றுவிட்டார்.
பின்னர் 1999ல் வன்னியை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் இருந்து தர்மபுரி ஈழ ஏதிலியர் முகாமில் இறுதிமூச்சு வரை ஈழமக்களின் துன்ப துயரங்களுடன் பங்கெடுத்து சுயநலமற்று மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு 'வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்', 'அறமும் போராட்டமும்' ஆகிய இரண்டு நூல்களை எழுதியிள்ளார்.
தற்போதும் அவர் ஒருநூலை எழுதிக் கொண்டிருகையில் சாவு அவரை வென்றுவிட்டது என தெரிவித்துள்ளனர்.