இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு
உச்சிப்புளி அடுத்த நத்தை குளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக இரவு பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 36 லட்சம் மதிப்பிலான உரம், பூச்சிக்கொல்லி, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த கியூ பிரிவு பொலிஸார் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கடல் அட்டை, அழகு சாதன பொருட்கள், உரம், பூச்சிக்கொல்லி, சமையல் மஞ்சள், கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை, மத்திய மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது கடலில் படகை நிறுத்தி ஒரு சிலர் சட்டவிரோதமான முறையில் பொருட்களை படகில் ஏற்றி வந்ததை கண்ட கியூ பிரிவு பொலிஸார் அவர்களை படகுடன் மடக்கி பிடிக்க முயன்ற போது கடலுக்குள் சென்று தப்பிய நிலையில் கரையில் நின்ற இருவரை பொலிஸார் பிடித்து கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 38 சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்து ராமநாதபுரம் க்யூ பிரிவு அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பு ரூபாய் 36 லட்சம் எனவும் இலங்கை மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனவும், தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



