பிரித்தானியாவில் மோசமடையும் கோவிட் பரவல்! - நிபுணர்கள் அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவில் கோவிட் பரவல் மோசமடையும் நிலை காணப்படுவதான நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிட் பரவலை கட்டுக்குள் கொண்டுவர பிரித்தானியா கடும் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது நோய் பரவல் மிக தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் அதிகமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், குளிர்காலத்தில் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நோய் பரவல் அதிகரிக்காமல் இருக்க பெரும் உதவியாக இருந்தது.
எனினும், கோடை காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. முக்கக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன. பணியிடங்களுக்கு மக்கள் திரும்பினர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் மீளவும் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த மாதம் 21ம் திகதி ஒரே நாளில் 52 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும்.
ஏனைய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், மீளவும் கோவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த பிரித்தானியா அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.
குறிப்பாக நோய் பரவலை மோசமாக்கும் மூன்று முக்கிய தவறுகளை அரசு செய்வதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பதின்ம வயதினருக்குத் தடுப்பூசி போடுவதில்காட்டிய தாமதம், கூடுதல் தடுப்பூசி போடுவதில் தாமதம், முகக்கவசத்தால் பயன் இல்லை என்ற தவறான கருத்து போன்றவை பிரித்தானியாவில் நோய் பரவலை மோசமடையச் செய்வதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் விகிதம் அதகமாக இருப்பதால், நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, உலகிலேயே முதன் முறையாக கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை மருந்துக்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் என்ற மாத்திரை மருந்துக்கு பிரித்தானிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 37,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 9,208,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 141,395 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,574,349 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 1,019 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக7,492,475 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.