வடகிழக்கு பொருளாதார மேம்பாட்டை கண்டறிய உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026
செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் எனும் பெயரிலான ஓர் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026.10.15 ஆம் நாள் முதல் 2026.10.18 ஆம் நாள் வரை கனடா நாட்டில் தொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் வடகிழக்கு விவசாய ,பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றை இதன் மூலம் மேம்படுத்தவும் இந்த ஆய்வின் நோக்கமாக காணப்படுகிறது.
ஆய்வு மாநாடு
இந்த மாநாடானது, உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப் பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, குமுக-பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமைகிறது.
மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.