ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு
காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(5) வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
சமூக - பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பேணி, ஆரோக்கியமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் தற்போதைய அரசின் சுற்றாடல் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய நிகழ்வு
இதற்கமைய, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிக்கு இலங்கை தற்போது தீவிரமாகப் பங்களித்து வருகின்றது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் போது ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய 5 வனப்பகுதிகள், வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. மேலும், மேம்படுத்தப்பட்ட தேசிய பசுமை அறிக்கை வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மாகம மணல் மேட்டுப் பகுதி கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தால் 'பாதிப்புக்குள்ளாகும் பிரதேசம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அநுரகுமார தலைமையில்
அத்துடன் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் 'குடா புபுல' நீர் ஊற்று மற்றும் 'கபுரெல்ல' வெந்நீர் சதுப்புநிலப் பகுதி ஆகியனவும் வன ஒதுக்கீடுகளாக அறிவிக்கப்பட்டன.

“சொபா” மற்றும் “சொபா கெத” ஆகிய சுற்றுச்சூழல் சஞ்சிகைகளின் புதிய பதிப்புகளும், பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நூலும் இதன்போது வெளியிடப்பட்டன.
அத்துடன், இம்முறை தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு, "பூச்சிய கார்பன் உமிழ்வு" திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
காலநிலை மாற்றப் பிரிவு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

