உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா நிகழ்வுகள் திடீரென இரத்து
இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்ப விழா நிகழ்வுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) இரத்து செய்துள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த ஆரம்ப விழா நடத்தப்படுவதற்கு 24 மணித்தியாலங்கள் கால அவகாசம் இருந்த நிலையிலேயே திடீரென இரத்து செய்ய பி.சி.சி.ஐ. தீர்மானித்துள்ளது.
சிறப்பு விழா நடத்த திட்டம்
இந்த திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகாரபூர்வ ஆரம்ப விழா நடைபெறாத முதல் சந்தர்ப்பமாக இது அமைகின்றது.
இந்தியாவின் முன்னணி கலைஞர்களாக ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன், ரன்வீர் சிங், அர்ஜித் சிங், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கவிருந்தனர்.
பாரம்பரிய ஆரம்பவிழாவுக்கு பதிலாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக சிறப்பு விழாவொன்றை நடத்த பி.சி.சி.ஐ. தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.