இலங்கைக்கு கிடைக்கும் பணத்தில் 40 வீதம் கொள்ளையிடப்படுகிறது! உலக வங்கி கூறியதாக மத்தும பண்டார தகவல்
இலங்கைக்கு கிடைக்கும் பணத்தில் 40 வீதம் கொள்ளையிடப்படுவதாக உலக வங்கி கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பமே நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியது
டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றவர்கள் தமது ஆட்சியின் போது மக்கள் பணத்தை கொள்ளையிடவில்லை.
ராஜபக்ச குடும்பமே நாட்டுக்கு இநத அழிவை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் எமது நாடு பயங்கரமான இடத்தில் உள்ளது.
மக்களுக்கு உண்பதற்கு உணவில்லை.மருத்துவமனைகளில் மருந்து இல்லை. பிள்ளைகளுக்கு பாடசாலைகளுக்கு செல்ல வழியில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செல்ல முடியாது
ரணில் விக்ரமசிங்க இலங்கை மத்திய வங்கியில் கொள்ளையிட்டார் எனக் கூறியவர்களே தற்போது அவருடன் இருக்கின்றனர். ரணிலுடன் ஒன்றாக அமர முடியாது எனக் கூறிய தினேஷ் குணவர்தன தற்போது ஒன்றாக அமர்ந்து இருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் திருடர்களுடன் இணைந்து செல்கிறார். அவரால், அவர்களுடன் ஒன்றாக இணைந்து செல்ல முடியாது.ரணில் விக்ரமசிங்க வரிசைகளை இல்லாமல் செய்துள்ளதாக கூறுகிறார்.
வரிசைகள் முடியவில்லை. எரிபொருளை கொள்வனவு செய்ய பணம் இல்லை என்பதே பிரச்சினை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.