சஜித் தலைமையில் ஆட்சி மலர நாம் செயற்பட வேண்டும்: - ரஞ்சித் மத்தும பண்டார
மக்களது பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு கொடுக்கக் கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஒரே நீதி, ஒரே சட்டம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கு நீதி இல்லை. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எமது கட்சி கடந்து வந்த காலங்களில் பல ஜனநாயக ரீதியான தலைவர்களை உருவாக்கியது.
மக்களுடைய ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். தற்போது உள்ள சஜித் பிரேமதாச அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைவராக உள்ளார். குறிப்பாக இளைஞர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராவார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa), பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe), தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இந்த நான்கு பேரையும் பார்க்கும் போது ஏனைய மூவரும் வயது முதிர்ந்தவர்கள்.
அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டியவர்கள். அவர்கள் மூவருக்கும் அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்தவராக இளமையானவராகவும், அரசியல் வாழ்க்கையில் சுத்தமானவராகவும் சஜித் பிரேமதாச இருக்கிறார்.
கடந்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் கணிசமான மக்கள் அவருக்கு வாக்களித்து இருந்தனர். அதற்கு நாம் நன்றிக் கடனாக இருப்போம். இந்த நாட்டில் அனைத்து மதங்களும் வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். 5 மதத்தவர்களும் சமனாக வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டியது எமது பொறுப்பு.
நாட்டில் தற்போது கோவிட் தொடர்பான சிறந்த கட்டமைப்பு இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. எந்த பிரச்சனைக்கும் சரியான நேரத்தில் தீர்வு கொடுக்கக் கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை.
கோவிட் தொற்று காலத்தில் எந்த விடயமும் நேரம் கடந்த விடயமாகவே எங்களுக்குக் கிடைத்தது. சரியான நேரத்தில் தீர்மானங்களை எடுத்திருந்தால் தொற்றாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம்.
கோவிட் தொற்றால் மரணமடைந்தவர்களைக் குறைத்திருக்கலாம். இங்கு சரியான நிர்வாகம் இல்லை என்பதை அழுத்திச் சொல்கின்றோம்.
இந்த அரசாங்கத்தின் சீனி மோசடி. பருப்புக்கான விலை, தேங்காய் எண்ணெய் சந்தையில் இல்லை. ஒரு ரின் மீனைக் கூட வாங்க முடியவில்லை. எரிவாயுவின் பயங்கர அதிரடியான விலையேற்றம். மக்கள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
இதனால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டில் டொலர் இல்லை. பசளை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களுடைய ஆட்சியில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தோம். வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தோம்.
தாராளமாக டொலர்கள் இருந்தன. எங்களுடைய காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உள்ளூர் உற்பத்தி நிறைவு பெற்றிருந்தது.
எனவே அதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பசளை தொடர்பில் பேசப்படுகிறது.
அரசாங்கத்தில் உள்ள சிலர் அந்த பசளை வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசாங்கத்தில் உள்ள இன்னும் சிலர் அந்த பசளை வேண்டாம் என்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான அரசாங்கத்தை எங்களுடைய அரசாங்கமாக வைத்திருக்க வேண்டுமா? எனவே, சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி மலர நாம் செயற்பட வேண்டும்.
குறிப்பாக அரச சொத்துக்களை விற்பனை செய்ய மாட்டோம் என ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் அரச சொத்துக்களைப் பங்கிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே ஊழல் நிறைந்த, வளங்கள் இல்லாத இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.
இந்த நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்பட
வேண்டும். அதற்கு நாம் சஜித் பிரமேதாசவை பலப்படுத்த வேண்டும் எனத்
தெரிவித்துள்ளார்.