ஜனாதிபதி ரணிலின் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு: உறுதியளித்த உலக வங்கி (Photos)
இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையில் நேற்று (18.09.2023) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த விசேட சந்திப்பின் போதே உலக வங்கித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) இலங்கையின் புத்தாக்க பாதைக்கான பிரவேசம் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள இந்த செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, அந்த முயற்சிகளுக்கு உலக வங்கியின் முழுமையான ஒத்துழைப்பு கிட்டும் என்றும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவருக்கு நன்றி.
விவசாய நவீனமயமாக்கல்
இலங்கை முழுமையான பொருளாதார மறுசீரமைப்புப் பாதையில் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்த தசாப்தத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களை முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது.
இலங்கைக்கு அபிவிருத்திக்கு பொன்னான கதவுகளை திறந்துள்ளது என தான் நம்புகின்றேன்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுற்றுலா, தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்பு, விவசாய நவீனமயமாக்கல் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இணைந்து பாரம்பரிய ஏற்றுமதி பயிர்களுடன் இலங்கையின் விவசாயத்துறையின் நவீனமயமாக்கல் செயல்முறையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல், மகளிர் ஆணைக்குழு உருவாக்கம் மற்றும் பெண்கள் ஆய்வுக்கான நிறுவனத்தை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக 4 புதிய சட்டமூலங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.
இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து தேவையான ஆலோசனை சேவைகளுக்காவும் தொழில்நுட்ப உதவிகளுக்கும் அவசியமான நேரங்களில் தம்மை அல்லது சர்வதேச நடவடிக்கைகளுக்கான தலைவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்த உலக வங்கியின் தலைவர், ஒக்டோபர் மாத இறுதியில் சர்வதேச நடவடிக்கைகளுக்கான தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமை
சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமை அளித்து பொருளாதாரச் மறுசீரமைப்புக்காக மேற்கொண்டுள்ள அணுகுமுறையானது சாதகமானது என சுட்டிக்காட்டிய உலக வங்கியின் தலைவர், தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு அதுவே மிகவும் பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
உலக கப்பல் பாதையின் மத்தியஸ்தானமாக விளங்கும் இலங்கையின் புவியியல் அமைவிடம் தனித்துவமானது. அதனால் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவதற்கு துறைமுக வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என உலக வங்கியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம்
மேலும் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டங்கள் வெளிப்படைத்தன்மை மிக்கதாக திறம்பட முன்னெடுக்க வேண்டுமென உலக வங்கியின் தலைவர் தெரிவித்ததோடு, அந்த மாற்றங்களை செய்யும் போது, ஆசிரியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தடையேற்படுத்த முற்படாலாம் என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாணவர்களின் எதிர்காலமே தனக்கு முக்கியம் என்றும் வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனை ஊக்குவிப்பதே தனது நோக்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் சமரநாயக்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.