காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தெரிவு
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளை மாத்திரமே பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மல்லிகார்ஜுன கார்கே
தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பின்னர், நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகியுள்ளார்.
மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
இதற்கு முன் நேரு – காந்தி குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரி 1996-98 காலகட்டத்தில் இப்பதவியில் இருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியுள்ளார்.
இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டது.
மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களில் 9 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டிற்கே சென்று வாழ்த்திய சோனியா காந்தி
இந்நிலையில், தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற கார்கேவினை பாராட்டும் முகமாக சோனியா காந்தி ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த சோனியா காந்தி, கார்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்குச் செல்வது அரிதான நிகழ்வு.
இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழல் வழக்கில் 2015 ம் ஆண்டில் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு பேரணி நடத்தப்பட்டது.
அப்போது சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் வீட்டிற்குச் சென்றார். அதன்பின்னர் அவர் சென்ற இரண்டாவது காங்கிரஸ் தலைவரின் இல்லம் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
May you like this Video