இமயமலைப் பிரகடனத்தின் தேசிய உரையாடலுக்கான பயிலரங்குகள் ஆரம்பம்
இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடல் பயிற்சிப் பட்டறைகளுக்கான பயிலரங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில், நடைபெறவுள்ள உரையாடல்களை ஊக்குவிக்கும் நோக்கில், 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிப்பதற்கான ஐந்து பயிலரங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன.
எனினும், முதலாவது பயிலரங்கு குருநாகலில் ஆரம்பமாகியுள்ளதோடு கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் பயிலரங்குகள் இடம்பெறவுள்ளன.
முக்கிய வளவாளர்கள்
இந்தப் பயிலரங்குகளின் பங்கேற்பாளர்கள் எதிர்வரும் மாதங்களில் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் உரையாடல்களை எளிதாக்குவதற்கான முக்கிய வளவாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் குருநாகலில் நடைபெற்ற பயிலரங்குகளில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து மாதம்பகம அசாஜி திஸ்ஸ தேரர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், கித்தலாகம ஹேமசார நாயக்க தேரர், சியம்பலகஸ்வௌ விமலசார தேரர் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகத்தமிழர் பேரவை
இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில் விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும் பங்கேற்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த உலகத்தமிழர் பேரவையின் சார்பில் கலந்து கொண்ட எலியாஸ் ஜெயராஜா “நாகர்கோட்டை உரையாடலின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல் போல இருந்தது. பெரும்பாலான பங்கேற்பாளர்களிடமிருந்து இமயமலை பிரகடனம் பற்றி மிகவும் சாதகமான கருத்துக்களைக் கேட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6 பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |