ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உழைக்கும் மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள்: சந்திரகுமார்
“வரலாறு சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்களின் மீது ஆளும் வர்க்கம் சுமத்தியுள்ளது எனவும் உழைக்கும் மக்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறார்கள்” என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
புதிய மாற்றமொன்றைக் கோரும் வகையில் மாற்றத்துக்கான சமத்துவ மே தின அறைகூவலை விடுக்கிறோம் என சமத்துவக் கட்சி மேதினம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி மீட்பு உத்திகளாக, அயல் மற்றும் நட்பு நாடுகளிடம் கடன் கேட்பது, ஐ.எம்.எப்பிடம் நிதியுதவி பெறுவது என்பதோடு அரசு மிக மெதுவாகவே பொறுப்பற்று இயங்குகிறது.
இந்த அநீதியையும் தவறான அரசியற் போக்கையும் கண்டிப்பதோடு, வளமுடைய இலங்கைத்தீவு ஒரு காலம் ஆசியப் பிராந்தியத்தில் பலருக்கு ஆச்சரியமான வகையில் சிறப்பான பொருளாதார வலுவோடிருந்தது.
எல்லையற்ற இனவாதத்தின் விளைவாக உருவான போர், திறந்த பொருளாதாரக் கொள்கை, கட்டற்ற ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றினால் இன்று நாடு சீரழிந்து கடன் பொறியில் சிக்கி, சமாளித்துக் கொள்ள முடியாத அளவுக்குத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
உணவுப் பொருட்களிலிருந்து எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வரை எல்லாமே உச்சமான விலை உயர்வை எட்டியுள்ளன. அத்துடன் எல்லாப் பொருட்களுமே தட்டுப்பாடாகவும் உள்ளன. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் இன்று நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலுமாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களோடு இணைந்து நாமும் உழைக்கும் மக்களின் இந்த (மே 01) நாளில் மாற்றத்துக்கான சமத்துவ மேதின அறைகூவலை விடுக்கின்றோம். போர் முடிந்த பிறகு நாட்டிலே அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்று நம்பப்பட்டது.
ஆனால், இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமையோ இந்த நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானதாயிருக்கிறது. சர்வதேச அரங்கில், குறிப்பாக ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை பெற்றிருக்கக் கூடிய முக்கியத்துவம், தற்போதைய பொருளாதார - அரசியல் நெருக்கடிகளால் கேள்விக்குறியாகியுள்ளது.
தேசத்தின் மூலோபாய பிரதேசங்கள் அந்நிய சக்திகளின் ஆளுகையின்கீழ் செல்லக்கூடிய ஆபத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாட்டை '’இக்கட்டிலிருந்து காப்பாற்றக்கூடிய பொருளாதார உதவிகள்’' என்ற போர்வையில் சில நாடுகளால் போடப்படும் தூண்டில்கள், தேசத்தின் இறைமையைப் பலவீனப்படுத்துகின்றன.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் கொடுக்கக்கூடிய அழுத்தங்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்வி, சுகாதார, பொதுநல துறைகளைக் கையறு நிலைக்கு இட்டுச்செல்லும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மெய்யான மாற்றத்தைக் காண வேண்டுமாயின், அதிகாரத் தரப்புகளிலிருந்து மக்கள் வரையில் இனவாதக் கருத்துநிலையைத் தளர்த்த வேண்டும். பிற சமூகங்களிடையே நல்லிணக்கத்தைப் பேணி, புதிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்து நாட்டை தற்சார்புப் பொருளாதாரத்தில் வலுப்படுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். உடனடி மீட்பு உத்திகளாக, அயல் மற்றும் நட்பு நாடுகளிடம் கடன் கேட்பது, ஐ.எம்.எப்பிடம் நிதியுதவி கேட்பது போன்ற சமாளிப்பு நிகழ்ச்சிகளை விட்டு விட்டு மக்கள் நலன் அரசாட்சியை உருவாக்க வேண்டும்.
இதையெல்லாம் உடனடியாக அதிகார வர்க்கமோ ஆட்சியாளர்களோ செய்து விடப்போவதில்லை. மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் மூலமே நல்ல மாற்றத்துக்கான சாத்தியங்களை உருவாக்க முடியும்.
இன்று வரலாறு கண்டிராத வகையில் தீர்க்கதரிசனமில்லாத தலைமைத்துவம், முன்னுதாரணமில்லாத கொள்கைகள், இனப்பன்மைத்துவதை இல்லாதொழிக்கும் சட்டங்கள், வரலாறு காணாத ஊழல்கள் என தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்து நிற்கும் ஆளும் வர்க்கத்தை, பரிபூரணமாக அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிய, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் உருவாகியுள்ளது.
இந்தச்
சந்தர்ப்பத்தில் மெய்யான மாற்றத்தைக் காணும் மக்கள் எழுச்சிப்போராட்டமாக
இந்த மே நாள் எழுச்சியை வடிவமைப்போம். இதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்.
சமத்துவ மாற்றத்துக்கான குரலை மே நாளில் உயர்த்துவோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



