கிராமத்தை ஆக்கிரமித்துள்ள கம்பளி பூச்சிகள் - வீடுகளை விட்டு வெளியேறும் பிரதேசவாசிகள்
ஹபரணை - ஹிரிவடுன்ன இந்திகஸ்வெவ பிரதேசத்தில் புதுவகையான வெள்ளை நிற கம்பளி பூச்சிகள் இரவு நேரத்தில் படையெடுத்து வருவதால், அந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் சிறியளவில் பிரதான வீதி மற்றும் முற்றங்களில் காணப்பட்ட இந்த கம்பளி பூச்சிகள், தற்போது லட்சக்கணக்கில் பெருகியுள்ளன.
அவை வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் காணப்படுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக சிலர், தமது பிள்ளைகள் மற்றும் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியிடங்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
தற்போது இந்த கம்பளி பூச்சிகள் பிரதேசத்தில் உள்ள கிணறுகள், பயிர் நிலங்களில் அதிகளவில் காணப்படுகின்றன.
வீடுகளில் காயப்போடப்பட்டிருக்கும் வெங்காயத்தில் மாத்திரமல்லாது, மரம், செடி, கொடிகளிலும் இந்த பூச்சிகள் நிறைந்து காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.