கோர விபத்தில் சிக்கிய குடும்பம் - திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பலி
அனுராதபுரத்தில் சம்பவித்த கோர விபத்தில் 21 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கல்னேவ கலங்குட்டிய பகுதியில் உயிரிழந்த பெண்ணின் காதலன் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற நிலையில் அவரது வலது கால் உடைந்து இடது காலின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விஜிதபுர புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது.
கோர விபத்து
உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தை ஆகியோர் பலத்த காயங்களுடன் அனுராதபுரம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் தசந்தி நேத்மா பெரேரா, கலாவேவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் விஜிதபுர மகா வித்தியாலயத்தின் முன்னாள் மாணவியாகும்.
கண்டி பிரதேசத்தை சேர்ந்த அவரது காதலன் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 25 வயது ஜெயிலராக பணியாற்றி வருகின்றார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள்
தங்களின் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கான சுப நிகழ்வில் கலந்து கொள்ள இருவரும் கல்னேவாவின் கலங்குட்டியவுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
தசாந்தி நேத்மாவின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளன. விபத்து குறித்து கல்னேவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



