கணவனுக்கு தெரியாமல் கருக்கலைப்பு - நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் 7 வார கருவை அழித்ததாகக் கூறப்படும் பெண் உட்பட சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கணவருக்குத் தெரிவிக்காமல் கருவை அழித்த மனைவி உட்பட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க நேற்று உத்தரவிட்டார்.
பொலிஸில் முறைப்பாடு
கொழும்பு 14, மாதம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தெமட்டகொட பொலிஸில் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நாலக ஜயசிங்க, குறித்த பெண், முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் ஒரு திருமணம் செய்துகொண்டிருந்ததாகவும் அந்தத் திருமணத்தில் அவருக்கு ஒரு குழந்தை இருந்ததாகவும் தெரிவித்தார்.
அந்தத் திருமணத்தில் விவாகரத்து பெற்றதாக போலியான தகவல் வெளியிட்டு முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்தின் பின்னர் குழந்தையுடன் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வசிப்பதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கொலைக்குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் செயல்
அதன் போது பெண் கர்ப்பம் தரித்ததாகவும், ஆனால் அது கணவனுக்குத் தெரியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது.
கணவருக்கு தெரிவிக்காமல் 7 வாரங்களும் 4 நாட்களும் நிறைவடைந்த கருவை பெண் அழித்துள்ளார். கணவருக்கு பிறிதொரு நபரின் மூலம் தெரியவந்ததையடுத்து, அது தொடர்பில் தெமட்டகொட பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் சட்டத்தரணி நாலக ஜயசிங்க நீதிமன்றில் தெரிவித்தார்.
சட்ட விரோதமாக முன்கூட்டிய சிசுவை அழிப்பது கொலைக்குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் செயல் என சட்டத்தரணி நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பின்னர் கணவருடன் வசித்த நாரஹேன்பிட்டி வீட்டை விட்டு வெளியேறி கொழும்பு மாதம்பிட்டியில் உள்ள வீடொன்றில் வசித்து வருவதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.