வர்த்தகரிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண் தப்பியோட்டம்
கடுவலையை சேர்ந்த கோடிஸ்வரான வர்த்தகர் ஒருவரை இங்கிரிய பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மது திரவம் ஒன்றை வழங்கி மயக்கமுற செய்து, அவரிடம் இருந்த 39 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட அழகிய பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண், வர்த்தகருக்கு சொந்தமாக ஆடம்பர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அந்த வாகனத்தை இடையில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
25 பவுண் எடை கொண்ட தங்கச் சங்கிலி, மாணிக்க கல் பதிக்கப்பட்ட 6 பவுண் மோதிரம், மாணிக்க கல் பதிக்கப்பட்ட 8 பவுண் எடை கொண்ட பதக்கம் என்பவற்றையே பெண் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
ஆடம்பர வாகனத்தில் பெண்ணொருவருடன் வந்த ஆண் அறையில் மயங்கி கிடப்பதாக இங்கிரிய - பாதுக்க வீதியில் உள்ள ஹொட்டல் ஒன்றின் முகாமையாளர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார், ஹொட்டலுக்கு சென்று அறையில் மயங்கி கிடந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஹொட்டல் முகாமையாளர் மற்றும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணைகளில் பெண் மாத்திரம் வாகனத்தில் சென்றது தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு மயக்கம் தெளிந்த பின்னர், பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நண்பர் ஒருவர் வழங்கிய தொலைபேசி இலக்கத்திற்கு அமைய பெண், ஒரு நாளுக்கு முன்னர் அறிமுகமாகியதாகவும் அந்த பெண் தான் அணிந்திருந்த 39 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் தனது வாகனத்தை காணவில்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
வாகனத்தில் 19 லட்சம் ரூபாய் பணம் இருந்தாக வர்த்தகர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஹொட்டலில் உள்ள சீ.சீ.டி.வி கெமராக்களை ஆய்வு செய்த பொலிஸார், சம்பந்தப்பட்ட வர்த்தகரும்,பெண்ணும் வரவேற்பறையில் அமர்ந்து பானம் ஒன்றை அருந்தியவாறு பேசிக்கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில் பெண், வர்த்தகரை அழைத்துக்கொண்டு அறைக்குள் செல்வது, கெமராவில் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு இடையில், ஆடம்பர வாகனம் ஒன்று இங்கிரிய அரகாவில பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற பொலிஸார், அந்த வாகனம் வர்த்தகருக்கு சொந்தமாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 19 லட்சம் ரூபாய் பெண்ணின் கைகளுக்கு சிக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தை எதிர்நோக்கிய வர்த்தகர், பிரபலமான வர்த்தக சங்கத்தில் பதவி ஒன்றை வகிப்பதாகவும் வெளிநாடுகளில் இருந்து ஹார்ட்வெயார் பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.