முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட பெண்ணும் காதலனும் கைது
முச்சக்கர வண்டி ஒன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுக்கொண்டிருந்த மசாஜ் நிலையம் ஒன்றில் பணிப்புரியும் பெண்ணும் அவரது காதலன் எனக்கூறப்படும் நபரையும் பொலிஸார் கொழும்பு ஒருகொடவத்தை பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
பெண்ணும் ஆணும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்
சபுகஸ்கந்தை பொலிஸார் இவர்களை கொள்ளையிடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணும், ஆணும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என சபுகஸ்கந்தை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதியிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட அலைபேசி மற்றும் 3 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களான பெண்ணும் ஆணும் பயணம் செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறி பயணித்துள்ளனர்.
70 வயதான சாரதியை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி முச்சக்கர வண்டி கொள்ளை
பயணித்துக்கொண்டிருந்த போது பமுனுவில அனகாரிக தர்மபால மாவத்தை பகுதியில் வைத்து 70 வயதான முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி, அவரிடம் இருந்த பணம்,அலைபேசி மற்றும் முச்சக்கர வண்டியை கொள்ளையிட்டுள்ளனர்.
இது குறித்து சபுகஸ்கந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான மசாஜ் நிலையத்தில் பணிப்புரியும் பெண் அனுராதபுரத்தை சேர்ந்தவர் எனவும் 37 வயதான ஆண் கிரிபத்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர்களுக்கு மேலும் இப்படியான கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.