மட்டக்களப்பில் வீட்டில் தனிமையிலிருந்த பெண்ணை தாக்கி கொள்ளை
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டினுள் நுழைந்து நபரொருவர், துப்பாக்கியால் அப்பெண்ணை தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (14) பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி மீகவர் இலாகா வீதியில் வசித்து வரும் பெண்ணொருவர் கணவர் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், குறித்த பெண் இரவில் தாயாரின் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீட்டிற்கு வந்து தங்கி நின்று செல்வது வழமை.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்
இந்நிலையில், சம்பவதினமான இன்று பகல் ஒரு மணியளவில் குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது அங்கு கைதுப்பாக்கியுடன் உள்நுழைந்த நபரொருவர் கைதுப்பாக்கியால் பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு அவரின் கழுத்து மற்றும் கைகளில் இருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நகைகளை கொள்ளை அடித்த நபரின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக புகைப்படங்கள்- குமார்