புலஸ்தினியை பார்த்ததாக கூறிய சாட்சியை காணவில்லை - அரசாங்கம் அறிவிப்பு
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரி முஹம்மது ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மினை தான் பார்த்ததாக கூறிய சாட்சியை காணவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர் இதனை கூறியுள்ளார்.
“2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் குறிப்பிட்ட நபர் காணாமல் போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“தற்போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 735 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். மேலும், 19 சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
81 சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 25,753 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் சதி என்று முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறியதன் பின்னணியில், தனக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாததே காரணம் என குற்றம் சாட்டினார். “இந்த வழக்கில் முன்னாள் அரச புலனாய்வு சேவையின் (SIS) நிலந்த ஜயவர்தனவை அரச சாட்சியாக ஆக்குவதற்கு முன்மொழிந்தவர் முன்னாள் சட்டமா அதிபர்.
ஓய்வு பெறுவதற்கு முன்பு, பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒரு சதி என்று அவர் ஏன் கூறினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாததால் ஏற்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை,'' என்றார்.
