ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிரிகேடியர் இன்று வழங்கிய சாட்சி
சஹ்ரான் ஹாசீம் உட்பட மத தீவிரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்த தான்,அவர்களுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படும் வரை 9 தடவைகள் பாதுகாப்பு செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர் உட்பட பொறுப்புக் கூறவேண்டிவர்களிடம் தெளிவுப்படுத்தியதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சூலா ரத்னசிறி கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வின் முன் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் உட்பட பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு இவ்வாறு தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கில், முறைப்பாட்டாளர் சார்பில் சாட்சியமளிக்கும் போதே சூலா ரத்னசிறி இதனை தெரிவித்துள்ளார். பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் நெறிப்படுத்தலின் கீழ் அவர் சாட்சியமளித்துள்ளார்.
விரைவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அரச புலனாய்வு சேவையின் பிரதானிக்கு 2019 ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வெளிநாடு ஒன்றில் இருந்து புலனாய்வு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சருக்கு தெரிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரச புலனாய்வு சேவையின் பொறுப்பதிகாரியுடையது என நினைக்கின்றேன்.
புலனாய்வு தகவல் மிக முக்கியமானது என்பதால், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் இது கலந்துரையாடி இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய அனுபவம் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட தேசிய புலனாய்வு பிரதானிக்கு தடை இருக்கவில்லை.
திரட்டப்படும் புலனாய்வு தகவர்களை தேசிய புலனாய்வு சேவையின் பிரதானிக்கு தெரியப்படுத்துவோம். அதனை விடுத்து ஜனாதிபதியிடம் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்வதில்லை.
புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கும் முக்கிய தகவல்களை புலனாய்வுப் பிரிவின் பிரதானி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் பிரதானிகளுடன் பரிமாறிக்கொள்வதுண்டு.
எனினும் நாட்டின் பிரதான புலனாய்வு சேவையான அரச புலனாய்வு சேவையிடம் இருந்து எனக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்பதுடன் புலனாய்வு தகவல்களையும் பரிமாறிக்கொண்டதில்லை.
அரச புலனாய்வு சேவையின் பிரதானிக்கு கிடைத்ததாக கூறப்படும் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான தகவல் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடைபெறும் வரையில் எனக்கு கிடைக்கவில்லை.
புலனாய்வு தகவல்களை முன்வைத்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரியவர்களில் சஹ்ரான் ஹாசிம் உட்பட சிலர் ஏற்கனவே தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சாட்சியாளர் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் உட்பட பொறுப்புக் கூற வேண்டிய துறையினரிடம் முன்வைக்கப்பட்ட இரகசிய புலனாய்வு தகவல்கள் சிலவற்றை முன்வைத்து, இன்று சாட்சியாளரை நெறிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சாட்சியாளர் ஈகியோர் தேசிய பாதுகாப்பு பாதிப்பை ஏற்படுத்தும் இரகசிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இஸ்ஸதீன் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
