மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற மாட்டேன்-சம்பிக்க ரணவக்க
மக்கள் ஆணையில்லாத அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு தனக்கில்லை என 43வது படையணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுபவன் அல்ல

நான் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதில்லை. தற்போது அரசாங்கத்தின் கீழ் அமைச்சு பதவியை பெறவோ, அரசாங்க ஆட்சி அதிகாரத்தில் சம்பந்தப்படவோ தயாரில்லை.
இலங்கையின் அரசியலுக்கு தேவையான விரிவான பலமிக்க புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
இளம் தலைமுறையினரை அடிப்படையாக கொண்ட புதிய அரசியல் சக்தியே தற்போது நாட்டுக்கு தேவை. பல்வேறு அமைப்புகள் கூட்டணி அமைப்பது சிறந்தது.
இளம் தலைமுறையினரை கொண்ட புதிய அரசியல் அமைப்பு அவசியம்

எனினும் தற்போது நாட்டுக்கு தேவை மாறுதல். போராட்டம் மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலைமை என்பன நாட்டில் அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த இளம் தலைமுறையினரை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன.
பொலிஸ் அடக்குமுறையை நிறுத்தி, எவரும் போட்டியிடக்கூடிய விதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியா அல்லது தோல்வியா என்பது எனக்கு தெளிவில்லை. நாணய நிதியத்தின் உதவி கிடைக்கா விட்டாலும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.