இலங்கையில் வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று கூடவுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, கொள்கை வட்டி விகிதத்தை மாற்றமடையாமல் வைத்திருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வைப்பு வீதம் 14.5 சதவீதமாகவும் கடன் வசதி விகிதம் 15.5 சதவீதமாகவும் உள்ளது.
இலங்கையைப் போன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் பாகிஸ்தான் தொடர்பிலும் Bloomberg தகவல் வெளியிட்டுளள்து.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறுவதற்காக, பாகிஸ்தான் மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை 19 சதவீதமாக உயர்த்தும் என இது தொடர்பான ஆய்வில் கலந்து கொண்ட 28 பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடத்தின் கடைசி சில மாதங்களில் 70 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் 50.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.