உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார தடையிலிருந்து ரஷ்யா மீளுமா?
உக்ரைன் மீது கடந்த மாதம் 24ஆம் திகதி ரஷ்யா தனது மேற்கொண்ட தாக்குதலானது ஒரு மாதத்தையும் கடந்தும் தொடர்கின்ற நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கின்றது.
போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மறுபுறமாக உக்ரேனுக்கு ஆயுதங்களை வாரிவழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயுதங்களை வழங்காமல் இருந்தாலே யுத்தம் நிறைவுக்கு வரும். ஒவ்வொரு நாடுகளும் தங்கள் ஆயுதங்களைப் பரீட்சிக்கும் களமாக மாறியிருப்பதுதான் ஆபத்தானது.
உக்ரைனில் போர் நிறுத்தப்பட்டாலும் போரினால் ஏற்ப்பட்ட சேதங்களிலும், போர்க்கழிவுகள் ஏற்படுத்திய கதிரியக்க, கந்தக தாக்கங்களிலிருந்தும் மீள சில தசாப்தங்கள் எடுப்பதை யாரும் தடுக்க முடியாது.
ரஷ்யா மீது பல ஆக்கிரமிப்புக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும் அது மேற்கொள்ளும் போரானது தனது செல்வாக்கு மண்டலத்தின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட போராகவே அமைத்திருக்கிறது. தான் நேட்டோவால் சுற்றி வளைக்கப்படுகின்ற அபாயம் காரணமாக புவிசார் அரசியலில் ரஷ்யாவின் எல்லையில் உக்ரேனை மேற்கத்திய அரணாகக் கொண்டு நேட்டோ விரிவாக்கம் செய்வது தனக்கு இருப்புசார் அச்சுறுத்தலாக ரஷ்யா பார்க்கிறது.
இதன் காரணமாகவே உக்ரேனை நேட்டோவுடன் இணைந்து கொள்ளக் கூடாது என்று கூறி எந்த அழுத்தங்களுக்கும் பணியாது போரிடுகிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்தபின் போலந்திலும், றொமேனியாவிலும் படைத்தளங்களை அமைத்து கருங்கடலையும், உடைந்த சோவியத் நாடுகளையும் கண்காணித்து வந்தது அமெரிக்கா.
அதன் மறு விரிவாக்கமாக கிரீமியாவில் உள்ள செவஸ்ரர் போல் துறைமுகத்தில் ஒரு கடற்படை தளத்தை நிறுவும் திட்டத்தை தீட்டியிருந்தபோது உடனடியாக விழித்துக்கொண்ட ரஷ்யா 2014 இல் திடீரெண்டு அதன் மேல் ஒரு போர் தொடுத்து கிரிமியாவை தன்னுள் இணைத்துக் கொண்டது.
இதைச் சற்றும் எதிர்பாராத அமெரிக்கா உக்ரேனின் மேலதிக பகுதிகளை ரஷ்யா தன்னுள் இணைத்துக்கொள்ளாது தடுக்கும் வகையிலும், அதன் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும், உக்ரைனை நேட்டோவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இணைத்து தன் சார்பு நாடாகி விட்டால் ரஷ்யாவை மேலும் முடக்கி அதன் வல்லரசு விரிவாக்கத்தை தடுத்துவிடலாம் என அமெரிக்கா நினைத்து செயற்படுகிறது.
கிரிமியா குடா தனியாகப் பிரிக்கப்பட்டாலும் இக்குடாவை வளம்படுத்தவும், இதற்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்யவும் உக்ரேனில் உள்ள கிரிமியன் மலையில் உற்பத்தியாகி கிரிமியாவுக்குள் செல்லும் கிரிமியன் ஆற்றினையே நம்பியிருக்க வேண்டும். கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டவுடன் கிரிமியன் ஆற்றின் குறுக்கே அணையினைக் கட்டி நீரைத் தடுத்து விட்டது உக்ரைன்.
இதனால் கிரிமியாவில் ஏற்பட்ட நீர்ப்ற்றாக்குறையை போக்க ரஷ்யா கருங் கடல் வழியாகவே குழாய்மூலம் நீர் விநியோகத்தை மேற்கொண்டது. ஆனாலும் அது கிரிமியாவின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய அவ்விநியோகம் போதுமானதாக இருக்கவில்லை.
எனவே உக்ரைனின் கருங்கடற்பகுதித் துறைமுக நரங்களான பெர்டியன்ஸ்க், மெலிடோபோல், மரியுப்போல், போர்டன், ஒடிசா ஆகியவற்றைக் கைப்பற்றி ரஷ்யாவிலிருந்து கிரிமியாவுக்கு ஒர் தரைத் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் உக்ரேனை கருங்கடலில் இருந்து தனிமைப்படுத்தி தரைப்பூட்டு உள்ள நாடாக்குவதோடு மட்டுமல்லாது ரஷ்யாவிலிருந்து தரை மூலம் நீரை கிருமியாவுக்கு கொண்டுவந்து விடவும் முடியும்.
இந்தப்போரின் நோக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அல்லது கிரிமியாவை நாடாக உக்ரேனை ஏற்றுக்கொள்ள வைப்பதனூடாக கிரிமியாவின் நீர்த்தேவையை இலகுவாக கிரிமியன் ஆற்றின் மூலமே பெறமுடியும்.
மேலும் டொன்பாஸ் மாகாணத்தை தனிநாடாக அங்கீகரிப்பதனூடாக உக்ரேனை மேலும் கூறுபோட்டு, ரசிய ஆதரவு நாடொன்றை உருவாக்கி தனது புவிசார் அரசியலின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கிறது ரஷ்யா.
உலகின் இரண்டாவது பெரிய இராணுவ படைபலத்தைக் கொண்ட ரஷ்யா உக்ரைன் மீதான யுத்தத்தில் 2லட்சம் இராணுவத்தினரை களத்திலும், ஒன்றரை லட்சம் இராணுவத்தினரை பின்தளத்திலும் கிட்டத்தட்ட 35ஆயிரம் இராணுவத்தினரை மேலதிகமாகவும் என 4 லட்சம் இராணுவத்தினரை போரில் ஈடுபடுத்தியதோடு அதற்கு பக்கத்துணையாக யுத்த டாங்கிகள், கவசவாகனங்கள், ஏவுகணைகள், தாக்குதல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் முதலானவற்றையும் பயன்படுத்தியது.
மேலதிக இராணுவத்தை இறக்குவதற்கு பதிலாக வாடகை இராணுவத்தை ஒப்பந்தம் செய்திருந்தது. மறுபுறம் ஆசியாவின் நான்காவது இராணுவ பலங்கொண்ட நாடான உக்ரேனிய இராணுவத்தினரை நோக்கில் 11 லட்சத்திற்கும் அதிகமான படையினர் போர் உதவி அணி மக்கள் படையணி, அசோவ் சிறப்புப்படையணி. என 12,70 000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், நேட்டோ நாடுகளின் ஜவாகிளின், எரி4, போன்ற நவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்ரிங்கர், சாம் 8, சாம் 14 போன்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என அதிநவீன ஆயுதங்களும், நேட்டோவின் உளவு விமானங்களின் கதவல்கள், சிறப்பு பயிற்சியினரின் பயிற்சிகள், வாடகை இராணுவத்தினர், ஊடகப் பரப்புரைகள் என ரஷ்யாவுக்கு எதிரான போரை எதிர்கொள்கிறது.
இதை இரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாகவே பார்க்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட 30 மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவின் இந்த புவிசார் இருத்தலுக்கு எதிரான போரில் ஒன்று சேர்ந்திருப்பதானது.
ரஷ்யா சற்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். இதன்மூலம் ஏனைய நாடுகளுக்கும் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீது முள்ளிவாய்க்கால் வரை மேற்க்கொள்ளப்பட்ட போரில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இவ்வாறு பல நாடுகளின் ஒன்றிணைந்திருந்தன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யா மேற்கொண்டுவரும் இப்போரில் பல குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் கெல்லப்பட்டும், ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் வருவது வேதனைக்குரியது.
ஈழத்தமிழர்களும் இவ்வகையான அழிவுகளையும், இழப்புகளையும் சந்தித்திருந்தார்கள். உக்ரேனில் தற்போது இடம்பெறும் மக்கள் இழப்புக்களுக்கு உக்ரைனிய இராணுவமும் அதன் கிளர்ச்சிப்படைகளும் மக்களுடன் மக்களாக இருந்து ரசிய படைகளுடன் போர் புரிவதே காரணமாகும் இதை ரசிய ஆளில்லா விமானங்கள் பதிவுசெய்து ரசிய ஊடகங்களில் ஒளிபரப்பியும் இருந்தன. இச்செய்தியை மேற்குலக ஊடகங்களில் காணமுடிவதில்லை.
உதாரணமாக கருங்கடலின் துறைமுக நகரமான மரியுபோலில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள், 70 ஆயிரம் அசோவ் சிறப்புப்படையணி உள்ளடங்கலான இராணுவத்தினரை சுற்றிவளைத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்துகிறது ரசியப்படை.
இச்சுற்றிவளைப்பில் அகப்பட்ட மக்களை உக்ரைனிய இராணுவம் பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்துவதற்கு தடுக்கிறது என குற்றச்சாட்டுகிறது ரஷ்யா. மக்களையும் விட்டுவிட்டால் தம்மீது இரசாயன ஆயுதத்தாக்குதல் மேற்கொண்டு மரியுப்போல் துறைமுக நகரை கைப்பற்றி உக்ரேனிய கடற்படையை முடக்கி இலகுவில் தரைப்பூட்டு உள்ள நாடாக தம்மை மாற்றிவிடும் என்ற பயம் உக்ரேனிடம் உண்டு.
மரியுபோல் கடற்படைத்துறைமுக நகரத்தினை நோக்கினால் ஈழத்தில் திருகோணமலை போன்று அசேவ் கடற்கரையோரம் அமைந்திருக்கின்ற இயற்கை பாதுகாப்பு அரண் உள்ள துறைமுகமாகும்.
இதற்கு ஒரு வரலாற்று பெருமை இருக்கிறது. ஹிட்லரின் படைகள் லெனின் கிராட் வரை படையெடுத்துச் சென்றபோதும் ரசிய படைகள் இந்த மரியுப்போல் துறைமுகத்தைக் அவர்களிடம் வீழாது பாதுகாத்திருந்தனர். இத்துறைமுகத்தை காக்கும் போரில் மட்டும் 7லட்சம் ரசியபடைகள் உயிரிழந்ததாக ரஷ்யாவின் புட்னிக் இணையத்தளம் அண்மையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது.
மரியுபோல் கடற்படை துறைமுகநகரம். உலகத்தரம்வாய்ந்த தொழில்நுட்ப நகரமாகும். சோவியத் காலத்தில் ரசியர்களின் கப்பல் கட்டும் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது.
எனவே இந்த நகரத்தை கைப்பற்றினால் உக்ரைனை பணியவைக்கலாம் என்று ரஷ்யா அதன்மீதான சண்டையை பலப்படுத்துகிறது. எப்படியாவது இந்த நகரை தக்கவைக்க வேண்டும் என உக்ரேனும் கடும் பிரயர்தனம் செய்வதோடு. ரஷ்யா கடற்படை இந்த துறைமுகத்தை நெருங்காத வகையில் மிக நெருக்கமான கடற்கன்னிவெடிகளை நீரில் விதைத்தும் இருக்கிறது.
கடந்த 23.03.22 கருங்கடல் பகுதியில் ரஷ்யா 21 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் ஒடிசாவில் 7 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும். தாம் தொடர்ந்தும் அவர்களை கண்காணித்துவருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்ததை நினைவிருக்கலாம்.
கடந்த 24 திகதி ORSK தரத்திலான தலைமைக் கப்பலை உக்ரேனிய கடற்படை தகர்த்திருந்தது. உலகில் எந்த நாடுகளுக்கும் விதிக்காத பொருளாதார தடைகள் ரஷ்யா மேல் போடப்பட்டும் ரஷ்யாவை பணியவைக்க முடியவில்லை.
லெனினுக்குப்பின் துணிச்சலான தலைவனாகவும், உடைந்த ரஷ்யாவை கட்டியெழுப்பி நேட்டோ வுடன் சவால்விடுமளவிற்கு வல்லரசாக மாற்றிய தலைவனாக புட்டினை ரசியர்கள் பார்க்கின்றனர். இருந்தபோதும் வரலாற்றில் ரசியர்களும், உக்ரேனியர்களும் ஒரு இனமாக வாழ்ந்தமையாலும், உக்ரேனை இன்று ஆசியாவின் 4 வது வல்லரசாக ரசியர்களே வளர்த்தெடுத்ததனாலும் இந்தப்போரை ரசியர்கள் பலர் விரும்பவில்லையேண்டாலும் இப்போர் தொடர்கிறது.
இப்போருக்கு உக்ரைன் ஜனாதிபதியின் இராசதந்திரமற்ற நகர்வுகளே காரணம் உக்ரைன் மீதான போரினால் ரஷ்யா மீது எரிவாயு, எண்ணெய், ஆயுத ஏற்றுமதிகள், கோதுமை மற்றும் கச்சாய் எண்ணெய் ஏற்றுமதிகள் என்ற தடைகளுடன் மட்டுமல்லாமல் ரஷ்ய விமானங்கள் ஏனைய நாடுகளில் பறப்பதை கூட தடை செய்திருந்தனர்.
பல ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள் கூட மேலைநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளைத் தாண்டி ஜி-20 அமைப்பிலும் இருந்தும்கூட ரஷ்யாவை நீக்க அமெரிக்கா யோசனை செய்கிறது.
ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளனர் உதாரணமாக மக்டொனால்ட். kFC நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள். இவ்வெளியேற்றத்தின் பின்னர் ரஷிய ஜனாதிபதி மே மாதம் 1-ஆம் தேதிக்குள் ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தன்னுடைய பணியை மீண்டும் தொடங்காது விட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என அறிவித்தார்.
இது பல வெளிநாட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. அத்துடன் கூகுள் நிறுவனமும் தன் சேவையை ரஷ்யாவுக்குள் நிறுத்த முடிவெடுத்திருப்பதோடு ஜிபிஎஸ் GPS சேவையையும் இடை நிறுத்த திட்டமிடுள்ளது. இதற்கு மாற்றீடாக ரஷ்யா ஏற்கனவே தயாரித்த குளோணாஸ் GLONASS (Global Navigation Satellite System) நடைமுறைப்படுத்த தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே ரஷ்யா தான் தயாரித்த போர்விமானங்களில் இந்த குளோணாஸ் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது. ஆனாலும் இது எல்லா தகவல் சாதனங்களுக்கும் வேலை செய்யுமா என்பது தெரியவில்லை.
இதற்கு மாற்றீட்டு வழியொன்றை விரைவில் ரசியர்கள் தேடுவார்கள். உக்ரைன் யுத்தத்தினால் ரஷ்யாவுடனான கூட்டு விண்வெளி ஆய்வு முயற்சிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தன்மீது விதிக்கப்பட்ட தடைகள் எடுக்கப்படாதவரை விண்வெளிப்பயணத்துக்கு உந்து இயந்திரங்களை வழங்க முடியாது என ரஷ்யா அறிவித்ததனால் பிரித்தானியாவின் வண்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் நடவடிக்கைகள் தடைப்பட்டிருக்கிறது.
இதேவேளை ஐரோப்பிய ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனம் தனது விண்வெளியில் இருந்து இணையச்சேவையை வழங்கும் ஸ்ரார்லிங் (Starlink) செய்மதித் தொகுதிக்கு கடந்த 9 ஆம் திகதி 48 செய்மதிகளை தனது சொந்த உந்து இயந்திரத்தின் உதவியுடன் முதன்முதலில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு உந்துதளம் பாதுகாப்பாக தரையிறங்கியிக்கிறது.
இது இனி எந்தநாடுகளும் வேறொரு நாடுகளை தங்கியிருக்கத் தேவையில்லை என்பதனை காட்டுகிறது. மேலும் பிரித்தானியாவுக்கு சொந்தமான போர்முடா தீவிலேயே உலகின் 80% விமானங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
ஏனெனில் இங்கு பதிவுசெய்யப்படும் விமானங்களுக்கு 0% வரிவிலக்கு இருக்கிறது. இதனால் பல நாடுகளின் விமானங்கள் இங்குதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் ரசிய விமானங்களும் இந்த தீவில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தன்னிடமுள்ள 1367 பயணிகள் விமானங்களில் 1300 விமானங்களை போர்முடா தீவிலேயே பதிவு செய்திருந்தது.
உக்ரைன் மீதான யுத்த்தினால் ரஷ்யா பதிவுசெய்த விமான உரிமங்களை பிரித்தானிய அரசின் வேண்டுகோளின் பேரில் போர்முடா நீக்கியது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட இவ்விமானத்தடையால் உலகத்தின் முதலாவது பயணிகள் விமானசேவையை ஆரம்பித்த ஏரோபுளோட் (Aeroflot) ரசிய விமானங்கள் வேறு நாடுகளில் பறக்க தடை செய்யப்பட்டதனால் அரசுக்கு சொந்தமான 1367 விமானங்கள் பறப்பின்றி தரையில் நிற்கின்றன. ரஷ்யாவிடமுள்ள 1367 விமானங்களில் 193 விமானங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானவை.
ஏனையவை குத்தகைக்கு பெறப்பட்டவை. இந்த குத்தகை நிறுவனங்கள் இந்தமாதம் 28 ஆம் திகதி வரை தங்களுக்குரிய பணத்தை தருமாறு காலக்கெடு விடுத்திருந்த நிலையில் தற்போது அனைத்தும் ரஷ்யாவுக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 22 ஆம் திகதி ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் விற்ராலி செவல்யேவ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது ரஷ்யாவுக்கு சொந்தமாக 1300 விமானங்கள் இருந்தன என்றும் தற்போது 800 விமானங்கள் ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமைகளும் வழங்கப்பட்டு விட்டன என்றும் விரைவில் மீதமுள்ள விமானங்களும் ரஷ்யாவிலேயே பதிவு செய்யப்பட்டு காப்புறுதிகள் வழங்கப்படும் என்றும் 78 விமானங்கள் வேறு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதில் கனடாவில் பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நின்ற ரசிய சரக்கு விமானம் ஒன்று கனடிய அரசால் பறிமுதல் செய்யப்பட்டு அதன் குத்தகை நிறுவனமான வொல்க்கா டினிபிர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவின் விமான சேவையிலுள்ள விமானங்கள் அமெரிக்காவின் போயிங், பிரான்ஸ் - ஜேர்மனி இணைப்பில் உருவான ஏயார்பஸ் நிறுவனங்களின் தயாரிப்புக்களே. உலக நாடுகள் பயணிகள் விமானங்களை இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்தே பெறுகிறது.
விமானத்தில் சிறு பிழைகள் ஏற்பட்டாலும் இந்நிறுவனங்களே விமான உதிரி பாகங்களை வழங்குகிறது. போர்முடாவினால் ரசிய விமானங்களுக்கான பதிவு உரிமங்கள் நீக்கப்பட்டதனால் விமான உதிரிப்பாகங்களையும், அடிக்கடி செய்யப்படும் System Updates தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதற்கும் மறுத்துவிட்டன.
System Updates செய்யாது விட்டால் தொழில்நுட்ப இணைப்பு ஏற்படுத்துவது கடினம் ஆகவே பாதுகாப்பாக பறக்க அனுமதியில்லை. ரசிய விமானங்களுக்கு போயிங் மற்றும் ஏயார் பஸ் நிறுவனங்கள் மேற்படி பாகங்களை வழங்க மறுத்துவிட்டதனால் தான் ரஷ்யா சீனாவிடம் போயிங் உதிரிப்பாகங்களை கேட்டிருந்தது.
இங்கு 1995 இல் ICAO சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு ஈரானுக்கும் இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்ட போது அதனிடமிருந்த 15 அமெரிக்க விமானங்களை தனதுடமையாக்கி தன்னுடைய விமான உதிரிப்பாகங்களை பயன்படுத்தி இயக்கி தன்நாட்டிற்குள்ளான பறப்புக்களை இன்றுவரை மேற்கொள்வது நினைவிருக்கலாம்.
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா ரஷ்யாவுக்கு பயப்படுகிறது என்று கூறியிருப்பதானது இந்தியா ரஷ்யா விடயத்தில் நடுநிலைமை வகிப்பது போன்ற தோற்றப்பாட்டில் மறைமுக ஆதரவு வழங்குவதை அமெரிக்கா பெரியளவில் ரசிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனாலும் இந்தியாவின் மீது அழுத்தம் கொடுக்க முடியாமல் உள்ளது ஏனெனில் அமெரிக்காவுக்கு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தேவை.
அத்துடன் இந்தியா குவாட் அமைப்பிலும் இருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடமிருந்தே தனக்குத் தேவையான 40% ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது காரணம் காஷ்மீரின் உறைபனியிலும், பாலைவனத்திலும் அவை தடையில்லாமல் இயங்குவதோடு விலையும் குறைவு என்பதனால். ரஷ்யாவின் S400 வான்தடுப்பு பாதுகாப்பு அமைப்பை இந்தியா பெற்றிருப்பதுடன் ஏகே 203 துப்பாக்கிகளை இந்திய - ரசிய கூட்டிணைவில் தயாரிக்கவுமுள்ளதனால் ரஷ்யாவை இலகுவில் முறித்துக்கொள்ள இந்தியா விரும்பாது.
குவாட் அமைப்பிலுள்ள யப்பானும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அறிவித்திருக்கிறது. இதனால் இரண்டாம் உலக மகாயுத்த கால ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு யப்பானுக்கு சொந்தமான ரஷ்யாவிடமுள்ள 4 தீவுகளை தன்னுரிமையாக்குவேன் என ரஷ்யா மிரட்டியிருக்கிறது.
இந்த அறிவிப்பால் ஆடிப்போயிருக்கும் யப்பான் தன் தடைகளை நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டைப் பயன்படுத்தியது என அமெரிக்க ஐநா அமைப்புக்கள் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அவர்கள் ஐகண்டர் எம் (Iskander M) என்னும் 500 km வீச்செல்லை கொண்ட ஏவுகணைகளில் சிறியவகை ஏவுகணைகளை ஏவி ஏவுகணை தடுப்பு பொறிமுறைமை குழப்பியது.
இதில் ஒரே தடவையில் 6 முதல் 12 வரையான ஏவுகணைகளை பிரதான ஏவுகணை சுமந்துவந்து ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையிலிருந்து தப்பி இலக்கை துல்லியமாக அழித்துவிடும்.
ஆரம்பத்தில் கொத்துக் குண்டு என நினைத்த மேற்குலக இராணுவ ஆய்வாளர்கள் தற்போது இத்தொழில் நுட்பத்தைக்கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆனால் ஈழத்தில் இலங்கை அரசு கொத்துக்குண்டுகளை பாவித்து தமிழ் மக்களை அழித்த ஆதாரங்கள் கிடைத்தும் மேற்குலகு இன்றுவரை மெளனம் காப்பதும் கொத்துக்குண்டு பாவிக்கப்படாத இடத்தில் அவற்றை பாவித்துவிட்டார்கள் இது போர்க்குற்றம் என்று கூறுவதும் விந்தையாகவே உள்ளது.
மேலும் ரஷ்யா தன்னிடமுள்ள ஹைப்பர் சோனிங் வகையான ஏவுகணைகளான குரூஸ் (804 km) மற்றும் ஹின்சால் (12,230km) களமுனையில் பயன்படுத்துவதானது உக்ரேனை மட்டுமல்ல நேட்டோ நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியதோடு ஒரு எச்சரிக்கையும் வழங்கியிருக்கிறது. ஹைப்பர் சோனிங் ஏவுகணைகள் தாழ்வாக ரேடாருக்கு அகப்படாமல் பயணிக்கக் கூடியவை.
எத்தகைய பொருளாதார தடைகளுக்கும் பணிய மறுத்து தான் அதற்கு ஏற்றாற்போல் தன்னால் முடிந்தவரை தன்னை தகவமைத்து அடுத்த கட்டத்துக்கு தயாராகிறது என்பது தெரிகிறது. தனது இருப்புக்கு ஆபத்து வரும்போது 1969 இல் அணுவாயுத உடன்படிக்கையில் கையொப்பமிடும்போது முன்வைத்த 4 கோரிக்கைகளின் படி அதை ரஷ்யா நடைமுறைப்படுத்தும்.
இதன் அர்த்தமே ரசிய அதிபரின் அணுவாயுத அச்சுறுத்தலும் 24.03.22 ரசிய வான்வெளியில் அணுவாயுத விமானங்கள் ஒத்திகைப்பவனி வந்த நிகழ்வும் எனலாம். போலந்தில் G7 மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த அதேநேரம் ரசிய வான்வெளியில் அணுவாயுத விமானங்களின் பறப்பு இடம்பெற்றிருக்கிறது. இது ரஷ்யா அணுவாயுதம் பயன்படுத்தும் என்ற அர்த்தமல்ல.
இவற்றை ஞாபகப்படுத்தியிருக்கிற து எனத்தோன்றுகிறது. அதேவேளை அமெரிக்கா இந்தோ - பசுபிக் கூட்டிணைவில் கவனம் செலுத்தி சீனாவை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதனை அதன் அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. தான் ஒரு இந்தோ பசுபிக் வல்லரசு என்று நீண்ட காலத்திற்கான தனது கொள்கை மூலோபாய உறுதி நிலை அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டமையானது.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் வலுவாக நிலையெடுத்துவிட்டதனை உறுதிப்படுத்துகிறது. இதை பாத்பைண்டர் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் யூலிசங் "எமது கிரகத்தின் எதிர் காலத்தின் பெரும்பகுதி இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் எழுதப்படும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது அத்துடன் இந்தோ - பசுபிக் மையத்தில் உள்ள இலங்கை ஒரு முன்னணி பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று கூறியதிலிருந்து அறியலாம்.
ஒரு காலத்தில் இத்தாலியின் பொருளாதாரத்திலும் தலைகீழாக மதிப்பிடப்பட்ட ரஷ்யா பொருளாதாரம் தற்போது அனைத்து நேட்டோ நாடுகளையும் எதிர்கொள்கிற அளவிற்கு வளர்ந்து பலமடைந்திருக்கிறது.
இது அதன்மீது எத்தனை தடைகள் போடப்பட்டாலும் தன்னுடைய இலக்கில் இறுதியில் இராணுவ ரீதியில் ரசிய படைகள் தோல்வியை தழுவியிருந்தாலும் இறுதி அர்த்தத்தில் அது தன்னை தன் புவிசார் அரசியலின் பிராந்திய நலனை பாதுகாப்பதில் வெற்றிபெறும் அதன்மீதுள்ள பொருளாதாரத்தடைகள் என்பது நீண்டகாலத்துக்கு விதிக்க முடியாது.
ஏனெனில் உலகம் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் தான் இயங்குகிறது எனவே 17 மில்லியன் கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ரஷ்யாவின்மீது அனைத்து தடைகளையும் விதித்தால் அது ஐரோப்பிய நாடுகளை விரைவில் பாதிக்கும் எனவே இத்தடைகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு தற்காலிகமானவையே!