லசந்தவிற்கு நீதி கிடைக்கும்: அரசாங்கம் உறுதி
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் கலாநிதி ஹரினி (Harini Amarasuriya) அமரசூரிய மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, லசந்தவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க முன்வைத்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்திய அவர், லசந்தவின் கொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் இயலுமான அனைத்தையும் செய்யும் என்று தெரிவித்தார்.
அஹிம்சா விக்ரமதுங்கவிடமிருந்து தனக்கு ஒரு கடிதம் வந்துள்ளதாகவும், அக்கடிதத்திற்கு தான் நேரில் பதிலளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மீள் விசாரணைகள்...
அத்துடன், இந்த வழக்கில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவும் மாறாமலும் உள்ளது, எனவே நீதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தைப் பராமரிக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் பிரதமர் எடுத்துரைத்தார்.
அதேவேளை, "தேவைப்பட்டால் லசந்த கொலை வழக்கில் நாங்கள் விசாரணைகளை மீண்டும் மேற்கொள்வோம், புதிய ஆதாரங்களைச் சேகரிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று கூறினார்.
அஹிம்சாவின் கோரிக்கை
லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தையின் கொலை வழக்கு விவகாரத்தில் சட்டமா அதிபர் கடமை தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகளின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட மூவரை விடுவிப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரைத்திருந்தமையே அவரின் இந்த கோரிக்கைக்கு காரணமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |