மின் கட்டணம் உயருமா..! நாளை இறுதி முடிவு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை(30) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டுக்காக அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நாளை இறுதி முடிவு
தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்தை விட, மேலதிகச் செயற்பாட்டுச் செலவுகளுக்காக மாத்திரம் சுமார் 15.8 பில்லியன் ரூபா தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால், "மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரவுகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது தற்போதைய நிலையிலேயே பேணுவதா என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.
மின்சார சபை
எனினும், மின்சார சபையின் கடந்தகாலக் கடன்கள் எவையும் புதிய கட்டணக் கணிப்பீட்டில் சேர்க்கப்பட மாட்டாது என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்." என குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவிய போதிலும், தற்போதைக்கு நாட்டில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமான காலாண்டு விலை நிர்ணய பொறிமுறையின் கீழேயே இந்தத் திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.