கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்று ஆதரவை அறிவிக்குமா..
இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சீனா இன்று (22.01.2023) ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அதன் தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கையின் நிதி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவு கடிதத்தை முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கையளித்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, கடந்த 16 ஆம் திகதி இந்தியா தமது ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்தது.
இந்தியாாவின் ஆதரவுக் கடிதம்
இந்த நிலையில், இன்று சீனா தனது ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தலைவர்களுடனான தனது சந்திப்பின் போது, தேவைப்படும் நேரத்தில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நிற்கிறது என்றும், தேவை ஏற்பட்டால் கூடுதல் தூரம் செல்லத் தயாராக இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.
தனது இலங்கைப் பயணம், பிரதமர் நரேந்திர மோடியின் “அண்டை நாட்டுக்கு முன்னுரிமை“ என்ற கொள்கையின் நிரூபணம் என்று அமைச்சர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பப்பட்ட ஆதரவுக் கடிதத்தில், இந்தியாவின் நிதியமைச்சும், இலங்கையின் ஆழமான நீடிக்க முடியாத கடன் நிலைமை, கடனளிப்பவர்களுடன் நாட்டின் ஈடுபாடு, கடனை நிலைநிறுத்துவதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கைக்கான உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான வலுவான ஆதரவை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்ட கால கோரிக்கை
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்கு முன்னதாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்ட கால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்ததாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்களுக்கு பொறுப்பான சீனாவின் எக்சிம் வங்கி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அதில் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்களை குறுகிய காலத்துக்கு நிறுத்தி வைக்கும் வகையில் இரண்டு வருட கால அவகாசத்தை சீனா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும், அதாவது இலங்கையின் கடன் வழங்குநர்கள் நடுத்தர கால மற்றும் நீண்ட கால கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றும் அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.