மேய்ச்சல் நிலப்பகுதியில் தீப்பரவல் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் (Photos)
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் உள்ள மேய்ச்சல் நிலப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியில் அமைந்துள்ள கால்நடைகளை மேய்ச்சல் செய்வதற்கும் அவற்றிக்கு தேவையான புற்களை குறித்த பகுதியிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் இன்று (28) மாலை 4.00 மணியளவில் திடீரென மேய்ச்சல் நிலப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் புற் தரைகள் தீக்கிரையாகியுள்ளன.எனவே எதிர்காலத்தில் கால் நடைகளுக்கு போதியளவு உணவு தேவையினை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் கடும் காற்றுடன் வரட்சியான காலநிலை நிலவுவதனால் தீ மிக வேகமாக பரவி வருவதுடன் தீயினை கட்டுப்படுத்துவதற்கும் முடியாதுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக வரட்சியான காலநிலையினையடுத்து பல புற்தரைகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பாற்பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான புற்களை தூர பிரதேசங்களுக்கு சென்று சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.
புற்தரைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் தீ வைப்பதன் காரணமாக பசும்பால் உற்பத்தியும் குறைவடையக்கூடிய நிலை காணப்படுகின்றன.
குறித்த பகுதியில் தீப்பரவல் வீதியில் சென்ற நபர் ஒருவர் சிகரட் குடித்து விட்டு அதன் தீபொறியினை கவனமின்றி வீசி எரிந்ததன் காரணமாக பரவியிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.







