கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் காட்டு யானை அட்டகாசம்: உயிர்தப்பிய வயோதிப குடும்பம்
முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த வீட்டில் வயோதிப குடும்பம் வசித்து வந்த நிலையில், காட்டு யானை வீட்டிற்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியபோது உயிர்தப்பியுள்ளனர்.
அத்துடன், வீட்டின் வளாகத்தில் இருந்த பயன்தரும் மரங்களையும் காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.
கோரிக்கை
இதேவேளை, அப்பகுதியிலுள்ள ஏனைய வீடுகளின் வளாகங்களுக்குள் புகுந்த யானை, தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.

குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக புகுந்து மக்களின் வீடுகள், பயன்தரும் மரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில், யானை வேலிகளை அமைத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





