ஏன் ரஞ்சன் விடுதலை செய்யப்படவில்லை?:சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்த உத்தரவுகளும் கிடைக்கவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கூறியிருந்தார்.
அத்துடன் சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயரை உள்ளடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வேளை ரஞ்சனுக்கு விடுதலை கிடைக்காவிட்டால், அதற்காக ஜனநாயக போராட்டத்தை நடத்தி, அவர் விடுதலை செய்யப்படும் வரை போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பதிவு ஒன்றில் ரஞ்சனை வரவேற்க வெலிகடைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்படலாம் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இதனிடையே 74 வது தேசிய சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மகர சிறையில் இருந்து 20 கைதிகளும், கேகாலை சிறையில் இருந்து 18 கைதிகளும், வெலிகடை சிறையில் இருந்து 17 கைதிகளும், களுத்துறை சிறையில் இருந்து 13 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் வாரியபொல சிறையில் இருந்து 10 கைதிகளும், போகம்பரை மற்றும் மட்டக்களப்பு சிறைகளில் இருந்து 11 கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.



