காபூல் விமான நிலையத்தை பாதுகாத்தது ஏன்? ஜோ பைடன் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் பாதிக்கபட்ட மக்களை விமான மூலம் வெளியேற்ற காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,
இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் பாதிக்கபட்ட மக்களை விமான மூலம் வெளியேற்ற காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம்.
இந்த வெளியேற்றும் பணி ஆபத்தானது, இது ஆயுதப் படைகளுக்கு ஆபத்துகளை உருவாக்கி உள்ளது. இறுதி முடிவு என்னவாக இருக்கும். அது என்னவாக இருக்கும் என்பதை என்னால் உறுதியளிக்க முடியாது.
ஜூலை மாதத்திலிருந்து 18,000க்கும் அதிகமான மக்களை நாங்கள் ஏற்கனவே வெளியேற்றியுள்ளோம். ஆகஸ்ட் 14 முதல் எங்களது இராணுவ விமானப் பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது என மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானியர்கள் 640 பேரை சுமந்து சென்றதாக தகவல் வெளியானது.
ஆனால் அப்போது கொண்டு செல்லப்பட்ட 183 குழந்தைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஆக மொத்தம், ஒரு விமானத்தில் ஒரே சமயத்தில் 823 பேர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த குளோப்மாஸ்டர் விமானத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனை. இதில் இதற்கு முன் ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் பயணம் செய்ததில்லை என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் நேற்று அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் 5 ஆயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.