குற்றம் புரிந்தவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - ராதாகிருஷ்ணன் எம்பி
குற்றம் புரிந்தவர் எவராக இருந்தாலும், அவர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது எந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று (05.07.2026) நடைபெற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இது அரசியல் பழிவாங்கல் எனக் கூறப்படுவதைக் காட்டிலும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் அண்மையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்திருந்தமை வரவேற்கத்தக்கது.
அந்த விலைக் குறைப்பு மக்களின் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ஓரளவு அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதைவிட வேகமாக உயர்ந்துள்ளதால் மக்களின் வாழ்க்கை இன்னும் சிரமமான நிலையிலேயே காணப்படுகின்றது.
பொருளாதார பாதிப்புகள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் யுத்தம் காரணமாக பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனினும், அந்த நிலைமை சீரடைந்த பின்னர் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்க வேண்டும்.
நீண்டகால பிரச்சினையாக காணப்படும் காணி உரிமை தொடர்பிலும் ஹட்டன் பிரகடனத்திலும், தலவாக்கலை நிகழ்வுகளிலும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல பாடசாலைகளின் அதிபர்கள் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகின்றன. அதற்கு முக்கிய காரணம் மாகாண சபைகள் செயலிழந்துள்ளமையே ஆகும்.
மாகாண பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிர்வாக கட்டமைப்பு மாகாண சபைகளின் கீழ் இயங்குவதால், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தி கல்வி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா ரொட்டரி கழகம்
இந்த நிகழ்வின் போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில், நுவரெலியா ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் சுமார் 401 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அக்கரப்பத்தனை பாடசாலையின் அதிபர் எம். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நுவரெலியா கல்வி வலயத்தின் மூன்றாம் கோட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள், பாதணிகள், கற்றல் உபகரணங்கள், நுளம்பு வலைகள், போர்வைகள், குடைகள், தலையணைகள், டவல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரொட்டரி கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

