கோவிட் தடுப்பூசி கொள்கையை மாற்ற முடிவு எடுத்தது யார்? நலிந்த ஜெயதிஸ்ஸ கேள்வி
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தேசிய தடுப்பூசி கொள்கையை மாற்றுவதற்கான நியாயமற்ற முடிவின் விளைவை நாடு, இன்று எதிர்கொள்கிறது என்று ஜேவிபியின் முன்னாள் உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும், கோவிட் செயலணியும் பதில் வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
கோவிட் இறப்புகளில் 75% க்கும் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தாதவர்களிடையே நிகழ்ந்துள்ளது. இது தடுப்பூசி கொள்கையை மாற்றிய முடிவின் விளைவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்று மணித்தியாலத்துக்கு 9 கோவிட் இறப்புக்கள் நிகழ்கின்றன.அதில் 7 இறப்புக்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்புடையது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 1லட்சம் பிசீஆர் சோதனைகள் நடத்தப்படவேண்டும்.எனினும் தற்போது 25 ஆயிரத்துக்கும் குறைவான சோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக தேசிய தடுப்பூசி கொள்கையின்படி கடந்த ஜனவரி 8 ம் திகதி தயாரிக்கப்பட்ட அறிக்கை சுகாதார அதிகாரிகளுக்கு தெரியாமல் கூட மாற்றப்பட்டது என்றும், இந்த தன்னிச்சையான, நியாயமற்ற முடிவு தற்போதைய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம், பத்து கேள்விகளை முன்வைப்பதாகவும், மக்கள் உண்மையான நிலைமையை அறியும் வகையில் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் தடுப்பூசி கொள்கையை மாற்ற முடிவு எடுத்தது யார்? சினோபார்ம் தடுப்பூசியின் ஒப்புதலை தாமதப்படுத்திய நிபுணர் தடுப்பூசி குழு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கோவிட் தடுப்பூசிக்கு முன்னுரிமை கொடுப்பதை விட தம்மிக்க சிரப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது ஏன்? பிரதேசங்களுக்கு தடுப்பூசி வகைகளை ஒதுக்கீடு செய்தது யார்? பிசிஆர் மற்றும் என்டிஜன் விலையை தீர்மானித்தது யார்? சுகாதார அதிகாரிகளை அவர்களின் பதவியில் இருந்து நீக்கியது யார்? தென்னாப்பிரிக்காவில் புதிய கோவிட் தோற்றம், மற்றும் டெல்டா பரவலுக்கு மத்தியில், இந்திய சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்தவர் யார்? என்பது உட்பட 10 கேள்விகளை நலிந்த ஜெயதிஸ்ஸ முன்வைத்துள்ளார்.



