நாங்கள் குற்றமற்றவர்கள்! ராஜித மற்றும் ரூமி மொஹமட் ஆகியோர் பதில்
சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு வழக்கு தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தாம் குற்றமற்றவர்கள் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்து பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை உள்ளிட்ட பதினான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் ராஜித சேனாரத்ன மற்றும் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணை
இந்த நிலையில் இன்று நீதிமன்ற விசாரணைக்கு முன்னர் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, தாம் இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த வழக்கு விசாரணையை ஆரம்பிக்க தீர்மானித்ததுடன், சாட்சியமளிப்பதற்காக அரச தரப்பு சாட்சியொருவரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு வெள்ளை வான் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக பதினான்கு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சகலவல்லி ஆராச்சிகே சரத் குமார மற்றும் வடரேக கமகே அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோர் வழக்கின் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.