எங்கே இருந்து ஆரம்பிப்பது..!
மாவீரர் வாரம் தமிழர் தேசம் எங்கும் எழுச்சி கொள்ளும் நிலையில் சிறப்பாக கதை சொல்லக்கூடிய நபர்கள் தான் இந்த உலகத்தை ஆளுகிறார்கள் என்று கிரேக்க தத்துவஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக மக்கள் கதைகளை நம்வுவார்கள் தமிழ் மக்களை பொறுத்தவரை நமக்கான கதை என்ன எந்த கதையை நம்புவதென்றே குழப்பம் புரையோடிப்போயுள்ளது.
சிங்கள மக்கள் அப்படி இல்லை அது கடந்து இரண்டு தேர்தல்களிலும் அவர்கள் மனநிலையை பிரதிபலித்திருக்கிறது. இந்நிலையில், நாம் எமக்கான கதையை எப்படி எழுதுவது என்பதில் இருந்து ஆரம்பிப்போம்.
நினைவேந்தல் செயற்பாடுகள்
2022 ஆண்டு முதல் பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது தேசமாக எப்படி சிந்திப்பது? பற்றி சி்ந்திப்பதோடு, தமிழ் மக்கள் மாவீர தின ஏற்பாடுகளை மும்முரமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் சில தடவைகள் தடைகள் போடப்பட்டிருந்தாலும் மக்கள் அதனை செய்தார்கள் இப்போது பேரழெழுச்சியாக துயிலுமில்லங்கள் தோறும் திரண்டு சென்று நினைவேந்தல் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
மாவீரர் தினத்தில் பெருமளவு மக்கள் கூடி அந்த புனிதரகளை நினைவு கூறுவர். இதனை யார் இவர்களுக்கு கற்றுத்தந்தது? கட்டாயப்பபடுத்தி யாரும் யாரையும் அழைத்து வரப்போவதில்லை! அந்த உணர்வு தமிழ் மக்களோடு இரத்தமும் சதையுமாக பிணைக்கப்பட்டுள்ளது.
சரி இது இவ்வாறு இருக்க கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த உணர்வு எங்கே போயிற்று? எங்கே நாம் தவறுகளை செய்தோம் என சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் தேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் வாக்கு 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தமிழ் மக்களது வாக்களிப்பு விகிதமும் அரசியல் மீதான பார்வைகளும் மாறி மாறி குழப்ப கரமானதாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் கட்சிகள் 17-க்கும் அதிகமான ஆசனங்களை கைப்பற்றியிருந்தன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2020ஆம் ஆண்டு தேர்தலில் 10 ஆசனங்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனமும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், தமிழ் மக்கள் தேசியக் கட்சிக்கு ஒன்று என இந்த ஆசனங்கள் கிடைத்திருந்தன.
அது கூட 2015 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடும் போது பின்னடைவே!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும் போதும் நாம் இன்னமும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தேசிய கட்சி ஒன்றை நம்பி மக்கள் வடக்கும் கிழக்குமாக ஏழு பிரதிநிகளை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது. இதற்கு வளர்ச்சி பெறும் சமூக வலைத்தள அரசியல் கலாசாரமே காரணமாகும்.
தமிழ்க்கட்சிகள் தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பிணக்குகளை கொண்டிருந்தும் அவர்களின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியும்தான் பிரதான காரணமாக இருந்தபோதிலும் சமூக வலைத்தள தாக்கமும் மேலோட்டமான பார்வைகளும் விளம்பரங்களும் கணிசமான அளவு தாக்கம் செலுத்தி இருக்கின்றன.
அது தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மக்கள் தீர்வு தொடர்பான தெளிவான வாக்குறுதி எதுவும் இல்லாத போதிலும் அதற்க்கு வாக்குகளை தந்திருக்கிறது
சமூகவலைத்தளங்களை தாண்டி சிந்திக்கும் ஆற்றல்
அதே நேரம் வைத்தியர் அர்ச்சுனா போன்ற போற போக்கில் கதைத்துக் கொட்டும் தெளிவற்ற கொள்கை அற்ற முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறும் ஒருவருக்கும் கிடைத்த வாக்கு, இதையே சுமந்திரனுக்கும் குறிப்பிட முடியும்.
அவரது அத்தகைய செயற்பாடுகளும் தாம் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் இந்த மந்தபோக்கிற்க்கு காரணம்.
அதற்க்குரிய தக்க எதிர்வினையை பதிலை அவர் பெற்று விட்டார். ஆய்வாளர் நிலாந்தன் கூறுவது போன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுப்கள் உருவாக்கும் புதிய அரசியல் பண்பாட்டுக் கூடாகவே இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் .
ஏனெனில் யூரியுபர்கள் எதனையும் தலைப்பிட்டு பிரபலமாக்க ஒரு சமூகம் அதற்குள் உள்ள உண்மையை அறியாமல் மேலோட்மாக அதை மட்டும் நம்பி முடிவெடுத்து விடுகிறார்கள்.ஆங்கிலத்தில் 'க்ளிக் பைட்' #clickbite என்று சொல்வர்.
குறிப்பாக, நாம் சமூகவலைத்தளங்களை தாண்டி சிந்திக்கும் ஆற்றல் அற்ற ஒரு தன்மையையும் எதிர் கொள்ள வேண்டும்.
இந்த வெற்றிடத்தை எப்படி தமிழ் மக்கள் கூட்டாக நிரப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். வைத்தியர் அர்ச்சுனா வருகையோடு புலம்பெயர் தமிழ் சமூகமும் ஈழத்திலும் ஆதரவு எதிர்ப்பு என மேலும் ஒரு முரணான சூழ்நிலைக்குள் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
அது தற்போதைய சூழ்நிலையில் ஒரு பொதுக் கட்டமைப்பின் அவசியப்பாட்டை வலியுறுத்துகிறது அது கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவை போன்ற பலவீனமானதொன்றாக அமைந்துவிடக்கூடாது.
ஜேவிபி மீதான பார்வையும் உள்ளூராட்சித்தேர்தலும்
ஜேவிபி பட்டை தீட்டப்பட்டு தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்து ஐனாதிபதித் தேர்தலோடு அதிர்வலைகளை ஏற்படுத்தி அதை வாக்குகளாக மாற்ற எடுத்த முயற்ச்சி இப்போது பெருவெற்றியாக மாறியிருக்கிறது. இதனோடு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வந்திருக்கிறது.
தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஒன்று உள்ளது. போரின் பிற்பாடு சமூகவலைத்தள தாக்கத்தோடு கூடிய ஒரு சமூகம் வளர்ச்சி கண்டு விட்டது.
அந்த பொறுப்பு தமிழ் கட்சிகளிடமே உண்டு. விகிதாசார அடிப்படையில் வட்டார ரீதியில் வேட்பாளர்களை நிறுத்த தெரிந்த கட்சிகள் தொடர்சியான மக்கள் தொடர்பாடல் வேலைகளை பெரும்பாலும் செய்வதில்லை.
இந்த தவறு தொடருமாயின் பெரும்பாலான சபைகளையம் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி வெல்லும் அதனை தமது தேசியக்கொள்கைக்கு சாதகமாகவே பயன்படுத்திவிடும்.
தேசிய மக்கள் சக்தி கருதுவதுபோல இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல.அது இலங்கையின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான்.
இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள்,தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினை தோற்றம் பெற்று, வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களுக்குத் தீர்வு காணப்படாத ஒரு நாட்டில், நாம் அனைவரும் சமம் அனைத்து மக்களும் சமமாக நடாத்தப்படுவார்கள் என்பது அந்த பிரச்சனையை மெழுகி மடைமாற்றல் போன்றது.
தேசிய மக்கள் சக்தி ஒரு தீவிர இடதுசாரி இயக்கமாக தம்மை காட்டிக்கொண்டாலும் அவர்கள் தேசியக்கொள்கைக்குள்ளே தான் சிந்திக்கிறார்கள்.
அதே ஐனாதிபதியின் தேர்தல் மேடைப் பேச்சுக்களிலும் நாடாளுமன்ற கன்னி உரையும் அப்படித்தான் உள்ளது.
இலங்கைத்தீவில் தேசிய இனப்பிரச்சினை
இடதுசாரிய பாரம்பரியத்தில் வந்தவர்கள் சிறுபான்மைத்தமிழ் மக்களின் வலிகளை புரியாமல் கடந்த காலங்களில் அடக்குமுறையின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள்.
தேசிய இனப்பிரச்சினை தோற்றம் பெற்று, வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களுக்குத் தீர்வு காணப்படாத ஒரு நாட்டில் எப்படி ஒரு தேசியக்கொள்கைக்குள் மக்கள் சமமானவர்கள் என்ற பேச்சை நம்பி பாதுகாப்பாக உணர்வது? இங்கே தான் வைத்தியர் போன்றவர்கள் கொள்கை தெளிவற்றவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
அவர் என்பிபி சமமாக சிந்திக்கிறது அதனால் அவர்களுக்கு ஆதரவு என தெரிவிக்கிறேன் என குறிப்பிடுவது அவர் திடீரென மாவீரர்களை புகழ்வதும் மறுபுறம் இப்படி செவ்வி வழங்குவதும் தெளிவற்ற தன்னமையே காட்டுகிறது.
அனைத்துமே மேலாதிக்கம் நிறைந்த நாட்டில் மதத்தை முன்னிறுத்தி அரசியலமைப்பை வைத்துள்ள நாட்டில் எப்படி சமமானவர்களாக ஒரு பாதிக்கப்பட்ட இனம் சிந்திக்கும்?
இலங்கைத்தீவில் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டு. அதற்க்கான உரிய தீர்வு காணப்பட வேண்டும் அதனை வெளிப்படையாக பேசி ஆராய்ந்து தீர்வு காண என்.பி.பி தயாரா என தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |