இலங்கையில் பெருந்தொகை கறுப்பு பணம் முதலீடு செய்யப்படும் இடங்கள்
இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தொகையான பங்குகளை மூடி மறைத்திருக்கும் சட்டவிரோத கறுப்பு பண பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்களது பணம், வீடுகள் மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்வதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமான புதிய தகவல்கள் நேற்று முன்தினம் வெளியான சிங்கள பத்திரிகை ஒன்றின் பத்தியில் வெளியிடப்பட்டிருந்தன.
கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் இருக்கும் ஆடம்பர வீடமைப்புத் தொகுதிகளில் வீடுகளை கொள்வனவு செய்த வர்த்தகர்களில் 20 முதல் 30 வீதமானவர்கள் பணத்தை சம்பாதித்தமை தொடர்பான தகவலை வெளியிட தயங்குகின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர வீடமைப்புத் தொகுதிகளில் உள்ள ஒரு வீடு 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளை கொள்வனவு செய்தவர்களில் 24 வீதமானவர்கள் 25 மில்லியன் ரூபாய் பணத்தை செலுத்தி அவற்றை கொள்வனவு செய்துள்ளனர்.
14 வீதமானவர்கள் 50 மில்லியன் ரூபாய் வரை செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்று நோய் காலத்தில் பொதுமக்களின் பொருளாதார வருவாய் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், மிக சொற்பமான சிலரது வருமானம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகையின் பத்தியில் கூறப்பட்டுள்ளது.