இலங்கையின் எரிபொருள் நெருக்கடி எங்கு நோக்கி செல்கிறது?
உலக எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் இல்லை என பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபேக் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது.
எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. எண்ணெய் விநியோகம் மற்றும் போக்குவரத்து சிக்கலாகியுள்ளது. இதனிடையே எரிபொருளுக்கான கேள்வி வேகமாக அதிகரித்துள்ளது.
இதன் கட்டாயமான பிரதிபலனாக எண்ணெய் விலை அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 முதல் 82 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அது தற்போது 90 முதல் 92 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது. இன்னும் குறுகிய காலத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 முதல் 105 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படலாம் என ஒபேக் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படியான நிலைமையில் இலங்கை போன்ற நாடுகளே மிகவும் கஷ்டங்களுக்கு உள்ளாகும். இலங்கையில் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருக்கின்றது.
மின்சார விநியோகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதே இலங்கையில் எரிபொருள் நெருக்கடியில் காணக் கூடிய முக்கிய அடையாளமாக உள்ளது. எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மின் விநியோக நெருக்கடியும் உருவாகும்.
மொத்த மின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட மின்சாரம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக எரிபொருளை களஞ்சியப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு இருக்கின்றது.
நீர் மின் உற்பத்தியில் இதனை விட எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது என்பதால், எரிபொருள் அற்ற மின் உற்பத்தி குறித்து இலங்கை கவனத்தை செலுத்த வேண்டும்.
அரசாங்கம் இதற்காக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தாலும் அவற்றின் பிரதிபலன்கள் உடனடியாக கிடைக்காது. இதனால், எரிபொருள் விநியோகத்தை ஸ்திரப்படுத்தும் வழிமுறை நோக்கி இலங்கை செல்ல வேண்டும்.
அத்துடன் இலங்கையின் போக்குவரத்து முற்றாக எரிபொருளை நம்பியே இருக்கின்றது. மின்சார ரயில் சேவை யோசனைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டு காணப்படுகிறது.
மின் கலங்களில் ஓடும் வாகனங்கள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. எரிவாயுவின் இயங்கும் வாகனங்கள் குறித்து கவனத்தை செலுத்த முடியும் என்ற போதிலும் தற்போதைய நிலைமையில், எரிவாயு விலை அதற்கு எதிராக உள்ளது.
சைக்கிள் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவது இதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவர சுட்டிக்காட்டி இருந்தார். சிலர் இதனை விமர்சித்தாலும் குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தக் கூடிய சிறந்த வாகனம் சைக்கிள்.
அத்துடன் உடல் நலத்தை பேணவும் அது சிறந்த வழிமுறை. இப்படியான யோசனைகளை நகைப்புக்கு உள்ளாக்காது, அதனை செயற்பாட்டு ரீதியாக அரசியல்வாதிகள் பரீட்சித்து பார்க்க வேண்டும்.
இலங்கையின் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மிக நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்குவது மட்டுமல்லாது அதற்கு வேறு காரணங்களும் உள்ளன. இதற்கு பிரதான காரணம் கடனுக்கு எரிபொருளை விநியோகிப்பது.
இலங்கை மின்சார சபை உட்பட பல அரச நிறுவனங்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கோடிக்கணக்கில் கடன் பாக்கி வைத்துள்ளன. இந்த கடனை செலுத்தாத நிலையிலும் மீண்டும் கடனுக்கு எரிபொருளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கி இருப்பது ஆச்சரியத்திற்குரியது.
கடனுக்கு எரிபொருளை விநியோகிப்பதை நிறுத்தினால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டம் பல மடங்காக குறையும். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான கடனாளி இலங்கை மின்சார சபை.
மின்சார சபை பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி வருவதால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனை செலுத்த வேண்டும். இலங்கையில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
அரசியல் விமர்சனங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. கூட்டு முயற்சியின் ஊடாக நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும்.
- கொழும்பு ட்ரிபியூன்