இறக்குமதி கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் தகவல்
அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது தற்போது அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் மெது மெதுவாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இறக்குமதித் தடை தற்காலிகமானது
இந்த நேரத்தில் ஒரு நாடாக நாம் வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணியை எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டு வருகிறீர்களா? அல்லது தொலைபேசி, கார், தொலைக்காட்சி வாங்க வேண்டுமா?
சில பொருட்களின் மீதான இறக்குமதித் தடை தற்காலிகமானது எனவும், அது வர்த்தகத்தை பாதிக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
எது அத்தியாவசியமானது எது அத்தியாவசியமற்றது என்பதை தீர்மானித்து எங்களிடம் உள்ள குறைந்தளவிலான வளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நிலைமை சீரானதும் கட்டுப்பாடுகளை நீக்க முடியும்
அத்தியாவசிய விடயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டால், இது போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அதனால்தான் அத்தியாவசியமற்ற விடயங்கள் தடை செய்யப்பட்டன.
கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட வளங்களை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துவதே தற்போது முக்கியமான ஒன்றாகும். இந்த நிலைமை தீர்க்கப்பட்டவுடன், கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.