ரணிலின் புலம்பெயர் அலுவலகத்தின் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட புலம்பெயர் அலுவலகம் உலகெங்கிலும் உள்ள அனைத்து புலம்பெயர் பிரிவுகளையும் உள்ளடக்கியதென தெரியவந்துள்ளது.
முக்கியமாக இந்த அலுவலகம் முதலீடுகள் மற்றும் சுற்றுலா துறையை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும் என கூறப்பட்டது. ஆனால் அதன் அலுவலகம் பற்றிய விவாதங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.
புலம்பெயர் தமிழர்கள்
இந்நிலையில், புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பின் மையப் புள்ளியாக செயல்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
“புலம்பெயர் அலுவலகமானது முக்கியமாக புலம்பெயர் பிரிவுகளுடன் ஒருங்கிணைத்து அவர்களை இலங்கை தொடர்பான விடயங்களில் குறிப்பாக முதலீடுகள் மற்றும் ஏனைய விடயங்களில் ஈடுபடுத்துவதாகும்.
இது முதலீடுகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல், சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பையும் உறுதி செய்யும்” என சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.
முதலீடு, சுற்றுலாத்துறை
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது அலுவலகத்தின் கவனம் இருப்பதாக நம்பப்படும் அதேவேளை, பாதுகாப்பு அமைச்சு ஆறு தமிழ் புலம்பெயர் அமைப்புகளை ஒகஸ்ட் மாத தொடக்கத்தில் தடை நீக்கம் செய்தது. எனினும் அது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறும் கருத்தை உள்ளிடக்கியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் எதிர்வரும் வாரங்களில் புலம்பெயர் அலுவலகத்தின் விவரங்களைப் பற்றி வேலை செய்வோம். எப்படியிருப்பினும், இது எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் மட்டுப்படுத்தப்படாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.