மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும்
புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம்.
குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்துவருகின்றது.
அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள் மறைமுகமாகவும் செய்கின்றார்கள்.
அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள் நாகரீகமாகவும் செய்கின்றார்கள். எதுவாயினும், தமிழ் மக்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் இல்லை.
ஆயுத மோதல்கள் முடிவு
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழ்மக்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது என்பது ஆக்கிரமிப்பு மனோநிலைதான். மருதங்கேணியிலும் அதுதான் நடந்தது.
அதன் விளைவாக நடந்த கைது நடவடிக்கைகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை அச்சுறுத்தும் நோக்கிலானவை. அண்மை மாதங்களாக முன்னணி அரசு படைகளோடும் பொலிஸாரோடும் நேரடியாக முட்டுப்படும் போராட்டக் களங்களைத் திறந்து வருகின்றது.
இதனால் ஆத்திரமடைந்திருக்கும் அரசபடைகளும் பொலிஸ் நிலையமும், முன்னணிக்கு அதன் வரையறைகளை உணர்த்தும் நோக்கத்தோடு மேற்படி கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம்.
அக்கட்சியை அச்சுறுத்தி அதன் செயற்பாட்டாளர்களை தற்காலிகமாகவேனும் உள்ளே தள்ளுவதன் மூலம் அக்கட்சியை தொடர்ந்து போராடவிடாமல் தடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.
இதுஏற்கனவே சிறீதரனுக்கும் நடந்தது, அவருடைய இரண்டு உதவியாளர்கள் பயங்கரவாதத் தடைச்சட்ட்தின் கீழ் பிடிபட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தவர்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம்
கடந்த 14 ஆண்டுகளாக ஆயுத மோதல்கள் இல்லை.எனினும் தமிழரசியல் அதிகம் இராணுவமயப்பட்டே காணப்படுகிறது.
தமிழ்மக்கள் எந்த ஒரு போராட்டத்தை முன்னெடுத்தாலும் அரசபடைகளுக்கும் புலனாய்வுத்துறைக்கும், திணைக்களங்களுக்கும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக போராடவேண்டியிருக்கும்.
அவ்வாறு அரச படைகளோடு மோதி அல்லது முரண்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுப்படுவதற்கு சாதாரண ஜனங்கள் அச்சப்படும் ஒரு சூழல்தான் இப்பொழுதும் உண்டு.
மருதங்கேணி சம்பவத்திற்கு எதிரான போராட்டடம்
அண்மையில் தையிட்டியில் விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கஜேந்திரன் தனி ஒருவராக புதர்களின் மத்தியில் தரையில் உறங்கும் காட்சி அவருடைய ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டது.
அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இருபதாயிரத்துக்கும் குறையாத வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் ஏன் அங்கே தனியாக நிலத்தில் உறங்க வேண்டும்? அவருக்கு வாக்களித்த மக்களும் அந்த கட்சியின் ஆதரவாளர்களும் எங்கே? அது உயர் பாதுகாப்பு வலையத்தை அண்மித்த பகுதி.
அங்கே சென்று போராடினால் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை உண்டு. அவ்வாறு போராடிய கட்சிக்காரர்களை பலாலி பொலிஸ் கைது செய்து பின் விடுவித்தது.
சட்டத்தரணிகளையும் விட்டுவைக்கவில்லை. போராடப் போனால் கைது செய்யப்படலாம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதே பொலிஸாரின் நோக்கம்.
மருதங்கேணிச் சம்பவத்திலும் ஒரு புலனாய்வாளர் தன்னைத் தடுக்கமுயன்ற கஜேந்திரக்குமாரைத் தட்டிவிட்டுத் தப்பியோடுகிறார்.
அவரை இரண்டு கட்சிக்காரர்கள்தான் துரத்திக்கொண்டு போகிறார்கள். ஏனைய பொதுமக்கள்குறிப்பாக, சந்திப்பில் கலந்துகொண்ட விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவரைத் துரத்திக்கொண்டு போகத் துணியவில்லை.
தமிழர்கள் போராட்டம்
அது ஒரு தமிழ் யதார்த்தம். அரசபடைகள்மற்றும்பொலிஸ், புலனாய்வுத்துறை போன்றவற்றோடு நேரடியாகமோத சாதாரண தமிழ் மக்கள் பயப்படுகிறார்கள்.
ஏன் அதிகம்போவான், நினைவு நாட்களின்போது எல்லா ஆலய மணிகளையும் அடிக்குமாறு கேட்கப்படுகிறது.
ஆனால் எல்லா கோவில்களிலும் மணி அடிக்கப்படுவதில்லை.எல்லா வீடுகளிலும் வெளிப்படையாக ஒரு சுட்டிகூட ஏற்றப்படுவதில்லை.
கட்சி அலுவலகங்களில் மட்டுந்தான் வெளிப்படையாக நினைவுச்சுடர் ஏற்றப்படும். சாதாரண ஜனங்கள் அவ்வாறு ஒரு சுட்டியை ஏற்றுவதற்குக்கூட பயப்படும் ஒரு நிலை.
பாரியளவு மக்கள் திரளப்படல்
அந்த அச்சத்தைப் போக்குவதென்றால் மக்களைத் திரளாக்க வேண்டும். உதிரியாக இருக்கும்வரைதான் அச்சமிருக்கும்.
ஆனால், பெரிய திரளாகக் கூடினால் எத்தனை பேரைத் தூக்குவது? போராட்டம் என்றாலே சட்டமறுப்புத்தான்.
சிறைகளை நிரப்புவதுதான். பொதுமக்கள் அதிகமாகக் குவியும்போது எல்லாரையும் தூக்கி உள்ளே போடமுடியாது.
உதிரியாகப் போராடும் போதுதான் தனித்தனியாகத் தூக்கி உள்ளே போடலாம்.
திரளாகக் குவிந்தால் முழுச் சமூகத்தையும் உள்ளே தூக்கிப் போட முடியாது. உதிரிகளாக இருக்கும்வரை மக்கள் பயப்படுவார்கள்.
திரண்டால் அதுதான் பலம். திரட்சி தான் பயத்தைப் போக்கும். தைரியத்தை உருவாக்கும்.
பொருத்தமான வேலைத்திட்டங்கள்
எனவே மக்கள் எந்தளவுக்கு எந்தளவு தங்களுடைய சௌகரிய வலையத்தை விட்டு வெளியே வருகிறார்களோ, அந்தளவுக்கு அந்தளவு போராட்டம் மக்கள் மயப்படும்.
ஆனால் தமிழ்க் கட்சிகளிடம் அதற்குரிய பொருத்தமான வேலைத்திட்டங்கள் இல்லை.
அவ்வாறான ஒரு பின்னணியில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக அரசு தரப்புடன் முட்டுப்பட வேண்டி வருகிறது.
மக்கள் முன்னணி
மக்கள் முன்னணி அந்தப் பயத்தை உடைத்துக்கொண்டு போராட முயற்சிக்கின்றது.
அதில் தனிமனித சாகசம் இருக்கலாம். எனினும்,அக்கட்சிக்கு ஒரு தட்டுத் தட்டி அடக்க வேண்டும் என்று அரசாங்கம் சிந்தித்ததன் விளைவே மேற்படி கைது நடவடிக்கை.
எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ் அரசியலை அண்மை மாதங்களாக நொதிக்கச் செய்வது முன்னணிதான்.
அதேசமயம், மருதங்கேணிச் சம்பவத்தின் பின்னணியில் அக்கட்சியின் அரசியல் எதிரிகளும் கட்சியின் தூய்மைவாத நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்தவர்களும் பின்வரும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்… அது ஒரு நாடகம்,முன்னணி வேண்டுமென்று முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது.
அதன்மூலம் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்த முயற்சிக்கின்றது. என்பது ஒரு பகுதியினரின் விமர்சனம்.
இன்னொரு பகுதியினர் முன்னணியைப் பலப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்கம் மேற்படி கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார்கள்.
தமிழ் திரட்சியைப் பலவீனப்படுத்தல்
இந்தியாவை எதிர்க்கும் ஒரு கட்சியை பலப்படுத்தினால் தமிழ்மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தலாம்.
அதனால் அரசாங்கத்தின் வேலை இலகுவாக்கப்பட்டு விடும்.
இரண்டாவதாக,தனது தூய்மைவாத நடவடிக்கைகளால் ஏனைய கட்சிகளோடு இணைய மறக்கும் முன்னணியானது தமிழ் ஐக்கியத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் தடையாகக் காணப்படுகின்றது.
எனவே அக்கட்சியை பலப்படுத்தினால் அது தமிழ்த் திரட்சியைப் பலவீனப்படுத்தும் என்று அரசாங்கம் சிந்திப்பதாக ஒரு விளக்கம்.
இவை தவிர, இக்காலப் பகுதியில் ஒரு பேப்பர் கட்டிங் முன்னணியின் அரசியல் எதிரிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டம் ஒன்றில் அது தொடர்பாக டெலோ இயக்கமும் குமார் பொன்னம்பலமும் தெரிவித்த கருத்துக்களைக் கொண்ட ஒரு செய்திக் குறிப்பு.
தமிழ் அரசியலில் விகாரம்
குமார் பொன்னம்பலம் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமையை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
முன்னணியை விமர்சிக்கும் தரப்புகள் குமார் பொன்னம்பலத்தின் விசுவாசத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு மேற்படி பேப்பர் கட்டிங்கைப் பகிர்ந்து வருகிறார்கள்.
கடந்த 14 ஆண்டு கால தமிழ் அரசியலில் விகாரமாக மேலெழுந்து வரும் ஒரு போக்கு இது.
தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்குவது. முன்பு மொட்டைக்கடிதம் இருந்தது.
சீரழிந்த விமர்சனப் பண்பாடு
இப்பொழுது புனை பெயரில் முகநூல் கணக்கு உள்ளது.தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக்கூறும்
சுதந்திரத்தையும் துணிச்சலையும் சமூகவலைத்தளங்கள் அதிகப்படுத்தியுள்ளன. அதனால் யானை பார்த்த குருடர்கள் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள்.
அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தமது அரசியல் எதிரிகளின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார்கள்.
குமார் பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்கை பரவலாக்குவதும் அதே சீரழிந்த விமர்சனப் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடுதான்.
ஆனால் அந்த விமர்சனப் பண்பாட்டை வளர்த்தெடுத்ததில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு.
தமது அரசியல் எதிரிகளை இனத்துரோகிகளாக உருவகிப்பதன் மூலம் அவர்களின் ஆளுமையை சிதைக்கும் ஒரு அரசியல் விமர்சனப் பண்பாட்டை அக்கட்சிதான் அதிகமதிகம் முன்னெடுத்து வருகின்றது.
யாராவது தமக்கு எதிராக எழுதினால் 'சோறு முக்கியம்' 'அவர்களுக்குப் பசிக்குந்தானே' என்றெல்லாம் எழுதுவது அந்த கட்சிக்காரர்கள்தான்.
அரசியல் விமர்சகர்களை சில ஆயிரம் ரூபாய்க்கு கட்டுரை எழுதுபவர்கள் யுடியூப்பில் உழைப்பவர்கள் என்று எழுதுவதும் அந்தக் கட்சிக்காரர்கள்தான்.
தமிழ் அரசியலில் விமர்சனத்தை அவதூறாக மாற்றியதில் அக்கட்சிக்குப் பெரிய பங்குண்டு. இப்பொழுது அதேவிதமான அவதூறு அவர்கள் மீதும் அள்ளி வீசப்படுகிறது.
ஒரு காலகட்ட அரசியல் நிலைப்பாடு
குமார் பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட அந்த பேப்பர் கட்டிங்கில் இருப்பது உண்மையா பொய்யா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சிலவேளை, அச்செய்தி உண்மையாக இருந்தாலும், அதை மட்டும் வைத்து குமார் பொன்னம்பலத்தை மதிப்பிட முடியாது.
அவருடைய வாழ்க்கையை முழுமையாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த பேப்பர் கட்டிங்கில் காணப்படும் செய்தி உண்மையாக இருந்தால் அது அவருடைய ஒரு காலகட்ட அரசியல் நிலைப்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் பிறகு ஒரு காலம் அவருடைய வேறொரு அரசியல் நிலைப்பாட்டுக்காகவே அவர் கொல்லப்பட்டார்.
அந்த நேரத்தில் அவர் தனது கொழும்பு மைய வாழ்க்கையை, தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்கும் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால் அவர் தன் உயிரை பாதுகாத்து இருந்திருக்கலாம்.
ஒரு மூத்த வாக்காளர் கூறினார் “ஜி.ஜி.பொன்னம்பலம் பெற்றெடுத்த ஒரு செல்வநாயகந்தான் குமார் பொன்னம்பலம்” என்று.
தமிழ் அரசியலில் சட்டச் செயற்பாட்டாளர்கள் என்று பார்த்தால், குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு சதம்கூட வாங்காமல் வழக்காடியவர் என்று பார்த்தால், குமார் பொன்னம்பலத்தின் வாழ்வு பெரியது.
மனிதர்களை அவர்களுடைய தொகுக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளால்தான் நிறுக்கலாம் .
ஒரு மனிதருடைய ஒரு காலகட்ட நிலைப்பாட்டை மட்டும் வைத்து நிறுக்க முடியாது .
எதிலும் ஒரு தொகுக்கப்பட்ட முழுமையான பார்வை அவசியம். தமிழ் அரசியலில் ஒருவர் தனது துறைசார்ந்து அதிகமாகத் தொண்டு செய்தாரா அல்லது தொழில் செய்தாரா என்று பார்க்க வேண்டும்.
இது குமார் பொன்னம்பலத்துக்கும் பொருந்தும். முன்னணியால் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். எனினும், சரிக்கும் பிழைக்கும் அப்பால் முன்னணி தமிழ் அரசியலை நொதிக்கச் செய்கின்றது.
இது அக்கட்சியின் ஆதரவுத் தளத்தை பலப்படுத்தும்.முன்னணி பயப்படாமல் போராடுகிறது.
அந்த முன்னுதாரணத்தை பின்பற்றி மக்கள் திரளக்கூடாது என்று சிந்தித்தே அரசாங்கம் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் மீது கைவைத்தது.
அதன்மூலம் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் அரச படைகளோடும் புலனாய்வுத் துறையோடும் பொலிஸ்நிலைய அதிகாரிகளுடன் முட்டுப்படுவதில் உள்ள வரையறைகளை, ஆபத்தை உணர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.
ஐ.எம்.எஃப்பின் நிபந்தனை
மேற்படி கைது நடவடிக்கைகளின்மூலம் ரணில், சிங்களபௌத்த உணர்வுகளைத் திருப்திபடுத்தலாம்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் உழைக்கின்றார்.
தாமரை மொட்டின் ஆதரவோடு அவர் களமிறங்கினால், தமிழ்வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்று அவர் அஞ்சக்கூடும்.
எனவே முழுக்கமுழுக்க சிங்களமக்களின் வாக்குகளில் தங்கியிருப்பது என்று முடிவெடுத்தால்,தமிழ் அரசியல்வாதிகளில் கை வைக்க வேண்டும்.
மேலும் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொழுது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கொதிப்பைத் திசை திருப்பவும் மேற்படி கைது நடவடிக்கைகள் அவருக்கு உதவும்