மாவீரர் நாள் உணர்த்துவது என்ன..!
நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.
“இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன். கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர். இப்போது இல்லை. எனது தம்பிக்கு நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன். இதை உங்களுடன் இன்று பகிர நினைத்தேன். இப்போது என் தம்பிக்கு நான். இனி வருங்காலத்தில்? யார் வருவார். என யோசித்தேன். என் பிள்ளைகளின் பிள்ளைகள்? ”
இது மாவீரர் நாளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைக் குறித்து உரையாடும் எவரும் சுட்டிக்காட்டும் ஒரு விடயம்தான். என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்..
"உன்னுடைய சகோதரன் உனக்கு உதவுவான். ஆனால் அவனுடைய பிள்ளை உன்னுடைய பிள்ளைக்கு உதவுமா?” என்று. இதே கேள்வியை வேறு ஒரு தளத்தில் நின்று இலங்கைக்கான முன்னாள் ஸ்கண்டிநேவியத் தூதுவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.” முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி இறக்கும்பொழுது இரண்டாம் தலைமுறை எந்தளவு தூரம் தாயகத்தை நோக்கி ஈர்க்கப்படும்?” என்று.
முதலாம் தலைமுறை ஆயுதப்போராட்டம்
உண்மை ஆயுதப்போராட்டம் நடந்த காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பெரும்பாலான கவனம் யுத்த களத்தை நோக்கி குவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் தாம் விட்டுப்பிரிந்த தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு ஊர்வலம் போனார்கள், வீதிகளை மறுத்தார்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள்.
தமது பெற்றோரின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து அடுத்த தலைமுறையும் அதனால் ஈர்க்கப்பட்டது. அக்காலகட்டத்தில் ஒடுக்குமுறை ஒரு கொடிய போராக இருந்தது. அந்த ஒடுக்குமுறையின் விளைவாக தமிழ்மக்கள் உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்தாலும், அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றாக திரண்டு காணப்பட்டார்கள். ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நிலைமை அவ்வாறு இல்லை.
ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கடலை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை நிர்வகித்தது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையை கொண்டவர்கள். அக் கடல் வழி ஊடாக தாயகமும் டயஸ்போறாவும் இணைக்கப்பட்டன.
அந்தக் கடல் வழியூடாக ஆயுதங்கள் வந்தன, ஆட்கள் வந்தார்கள், மருந்து வந்தது, அறிவு வந்தது. ஆனால் 2009 ஒன்பதுக்குப் பின் தாயகத்தையும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் இறுகப் பிணைக்கும் விதத்திலான இடை ஊடாட்டத் தளங்கள்,வழிகள் எவையும் கட்டி எழுப்பப்படவில்லை.
மிகக் குறிப்பாக சட்டரீதியாக ஏற்புடைய ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் எவையும் கிடையாது. சில புலம்பெயர்ந்த தன்னார்வ அமைப்புகள் தாயகத்தை நோக்கி உதவிகளை வழங்குகின்றன. தனி நபர்களும் வழங்குகிறார்கள். ஆனால் அரசியல் அர்த்தத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஓர் இடையூடாட்டத்தளம் தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும் இடையே கிடையாது.
புலம்பெயர்ந்த தமிழ் சமூகம்
ராஜபக்சக்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை ஒருவித அச்சத்தோடு பார்த்தார்கள். ஒரு பகுதி அமைப்புகளையும் தனி நபர்களையும் தடைப்பட்டியலில் சேர்த்தார்கள். அதனால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தோடு நெருங்கி உறவாடுவதில் இடைவெளிகள் அதிகமாக காணப்பட்டன. ஆனால் ரணில் விக்ரமசிங்க தடைகளை நீக்குகிறார் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக வைத்து அவர் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை தாயகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்.
அதாவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலான அழைப்பு அது. மாறாக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டி எழுப்புவதற்கான முதலீடு என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளோடு இடையூடாடக் கூடிய விதத்தில் பொருத்தமான கட்டமைப்புகள் எத்தனை உண்டு?
தாயகத்தை நோக்கி உதவிகளைப் புரியும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு இடையே இடையூடாட்டமும் குறைவு, ஒருங்கிணைந்த செயல்பாடும் குறைவு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கடந்த 13 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஜெனிவாவை எவ்வாறு அணுகுகிறது என்பதுதான்.
இவ்வாறு தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் இடையே தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி மறையும் பொழுது தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடிய ஆபத்து உண்டா?
மாவீரர் நாள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவீரர் நாள் அந்த இடைவெளி அப்படி ஒன்றும் பாரதூரமாக இல்லை என்பதை உணர்த்தியது.கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த மாவீரர் நாள் தாயகத்திலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பரவலாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மாவீரர் நாள் என்ற உணர்ச்சிப்புள்ளியில் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பீட்டளவில் ஒன்று திரண்டன.
பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்வதற்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். மேலும், அரசாங்கம் தமிழ்த்தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு பின்னணியில், நல்லெண்ணைச் சூழலை உருவாக்கவேண்டிய ஒரு நிர்பந்தமும் அரசாங்கத்துக்கு உண்டு.
எனவே உணர்ச்சிகரமான நினைவு நாளை ரணில் ஒப்பீட்டளவில் தடுக்கவில்லை. அதனால், திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பெருமளவுக்கு மக்கள் திரண்டிருக்கிறார்கள்.
அது தானாக வந்த கூட்டம். அதை யாரும் வாகனம் விட்டு ஏற்றவில்லை. தண்ணீர் போத்தல்,சாப்பாட்டுப் பார்சல், சிற்றுண்டி கொடுத்து அழைத்துக் கொண்டு வரவில்லை. அது தன்னியல்பாகத் திரண்ட ஒரு கூட்டம்.அவ்வாறு மக்கள் திரள்வதற்குரிய ஏற்பாடுகளை கட்சிகளும் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் செய்து கொடுத்தார்கள்.
அரசியல்வாதிகள் நினைவுநாட்களின் துக்கத்தையும் கண்ணீரையும் வாக்குகளாக ரசாயன மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு அதைச் செய்யக்கூடும். ஆனாலும் தடைகள் அச்சுறுத்தல்களின் மத்தியில் அவர்கள் முன்வந்து ஒழுங்குபடுத்தும் போது மக்கள் திரள்வார்கள் என்பதே கடந்த 13 ஆண்டு கால அனுபவம் ஆகும்.
13 ஆண்டுகளாக ஆறாத காயங்கள்
13 ஆண்டுகளின் பின்னரும் கண்ணீர் வற்றவில்லை. காயங்கள் ஆறவில்லை; கோபமும் தீரவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த மாவீரர் நாள் உணர்த்தியிருக்கிறது.
ஆனால் காலம் ஒரு மிகப்பெரிய மருத்துவர். அது எல்லாக் காயங்களையும் குணப்படுத்தக்கூடியது.நினைவுகளின் வீரியத்தை மழுங்கச் செய்யக்கூடியது. தமிழ் மக்கள் தமது கூட்டுத் துக்கத்தையும், கூட்டுக் காயங்களையும், கூட்டு மனவடுக்களையும் அரசியல் ஆக்கசக்தியாக மாற்ற வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.
நீதிக்கான போராட்டத்தின் பிரதான உந்திவிசையே அதுதான்.நினைவுகூர்தல் என்பது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒருபகுதி.இந்த அடிப்படையில் சிந்தித்தால், காலம் துக்கத்தை ஆற்றுவதற்கு இடையில் துக்கத்தையும் கண்ணீரையும் எப்படி அரசியல் ஆக்கசக்தியாக மாற்றலாம் என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்த 13 ஆண்டுகளில் காயமும் துக்கமும் ஆறாமல் இருப்பதற்குப் பிரதான காரணம் ஒடுக்குமுறைதான். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான். மாறாக தமிழ்த் தரப்பின் திட்டமிட்ட செயலூக்கமுள்ள அரசியலின் விளைவாக அல்ல. நடந்து முடிந்த மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரிடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு வழிகாட்ட அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியவில்லை” என்று.
ஒப்பீட்டளவில் அதிக தொகை ஜனங்கள் திரண்ட ஒரு துயிலுமில்லத்தில் வைத்து கூறப்பட்ட வார்த்தைகள் அவை.அதுதான் உண்மை. ஒரு கூட்டுத் துக்கத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு மக்கள் கூட்டம், கடந்த 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
