க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் மரணம்
நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவர் பரீட்சை ஆரம்பமான நாளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிபத்கொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா சுமேதா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் ஹிருன் தினுஜய என்ற 17 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த ஹிருன் தினுஜய, குடும்பத்தில் ஒரே மகனாகும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தினுஜாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரது பெற்றோர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவருக்கு டெங்கு தொற்று தீவிரமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். குறித்த மாணவனின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.