மேல் மாகாண ஆளுனர் பதவி விலகத் தீர்மானம்
மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தான் விலக விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஒருவராக இராஜதந்திரப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதுடன், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக தமக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்புக்களையும், தனது குடும்பப் பொறுப்புக்களையும் சமநிலையில் பேணுவது பெரும் சவாலாக உள்ளதன் காரணமாகவே ஆளுநர் பதவியிலிருந்து விலகும் விருப்பத்தை ஜனாதிபதிக்கு அறிவித்ததாக மேல் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சுமுகமான மற்றும் முறையான இடைக்காலப் பரிமாற்றத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஜனாதிபதியினால் பொருத்தமான அடுத்த ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் வரை மேல் மாகாண ஆளுநராகத் தாம் தொடர்ந்து கடமையாற்றவுள்ளதாக ஹனீப் யூசுப் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காகப் பொறுப்புவாய்ந்த ஒரு பதவியை வகித்து, தேசத்தின் முன்னேற்றத்திற்காக இயன்ற அனைத்து வழிகளிலும் பங்களிக்கக் கிடைத்தமை தனது பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் வகையில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பதற்கும் தனது சர்வதேச உறவுப் பின்னணியைப் பயன்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக தற்போது வகிக்கும் தன்னார்வப் பதவியில் தொடர்ந்து நீடிக்க எதிர்பார்ப்பதாகவும் ஹனீப் யூசுப் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசத்திற்குச் சேவையாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பு என்றும் மாறாது எனத் தெரிவித்துள்ள மேல் மாகாண ஆளுநர், ஜனாதிபதி தன் மீது வைத்த நம்பிக்கைக்கு மிகுந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.