வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த பணிப்பெண்: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வீட்டுப்பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் உப பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருட்டு குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் வீட்டு வேலை செய்த 42 வயதான ஆர். ராஜகுமாரி, கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதற்கு முன்னரும் இதேசம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கைதுசெய்த நிலையில், அவரையும் செப்டம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை காவலில் வைக்கும் பொறுப்பு முதல் சாட்சியான உப பொலிஸ் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸாரின் காவலில் இருந்த போது அவர் மோசமாக நடத்தப்பட்டதாக
விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.