வெலிகம படுகொலைச் சம்பவம் : விசாரணையில் புதிய திருப்பம்
வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட சில அதிகாரிகளின் நடத்தை குறித்து பொலிஸ் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் முன்னிலையில் வீடியோ பதிவு
மஹரகம, நாவின்ன பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, ஊடகங்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸ்மா அதிபரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டபோது, வெளிநபர் அல்லது எங்கள் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் அவரை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்திருந்தால், நாங்கள் விசாரிப்போம்.
நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு தொடர்பாக இந்த வழியில் ஆதாரங்களை வழங்குவது வழக்குக்கு பாதகமானது. இது பாதிக்கப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் பாதகமானது என்றும் நாங்கள் கருதுகிறோம்.
எனவே, ஒரு குற்றம் குறித்து செய்தி வெளியிடுவதற்கு முன்பு, முடிந்தவரை முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்துமாறு ஊடகங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |