பெண்கள் மற்றும் சிறுவர்களை விற்பனை செய்யும் இணையத்தளங்கள் - மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களின் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், 15 வயது சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்யப்பட்டமை குறித்து தெரியவந்ததை தொடர்ந்து இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது.
குற்றப் புலனாய்வு துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், இணையதளங்கள் குறித்து முழு அளவிலான விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்யும் மோசமான செயற்பாடு தொடர்ந்து வருகிறது.
பல்வேறு தரப்பினரால் உருவாக்கப்பட்ட பல இணையதளங்களில் இந்த வகையான மோசமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதன் மூலம் மக்களை கவர்ந்திழுப்பதோடு, மனித கடத்தல் குற்றம் ஊக்குவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.