யாழில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி - பல குடும்பங்கள் பாதிப்பு
யாழ். மாவட்டத்தில் நேற்று இரவு முதல் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் j/179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4 குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மாவட்டத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றும் இன்றும் இதுவரை 4 பேர் பலியானதாக அனர்த்த முகாமை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கேகாலை - ரம்புக்கனை பகுதியில் மண்சரிவுக் காரணமாக வீடு ஒன்றில் வசித்து வந்த மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வீட்டின் தாயும் இரண்டு மகள்மாரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், தந்தை காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் குருணாகல் பிரதேசத்தில் அளவ்வ பகுதியில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அனா்த்தங்கள் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் பிரதேச வென்னப்புவ பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக 44 குடும்பங்களை சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் 31 குடும்பங்கனை சேர்ந்த 57 பேர் அதிக மழைக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை பிரதேசத்தில் கடும் காற்று காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடும் காற்று காரணமாக நெடுந்தீவுப் பிரதேசத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மருதங்கேணி பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக 4 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேச எலபாத்த பிரதேசத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அயகம பிரதேசத்தில் 1 குடும்பங்களை சேர்ந்த 2 பேர் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலி போப்பே போத்தல பிரதேசத்தில் அதிக மழை காரணமாக 8 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.