சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருகிறது.
மலையகத்திலும் அடை மழை பெய்வதன் காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
வான்கதவுகள் திறப்பு
இந்த நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்போது மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கெனியன் நீர்த்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதோடு, அங்கு இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் அடை மழை பெய்து வருகின்றது.
நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்திலும் நீர் வான் பாய்ந்துள்ளது.
இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக அடை மழை
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. மண் சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற காலநிலையுடன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா உள்ளிட்ட வீதிகளில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் அடிக்கடி கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, வட்டவளை, ஹட்டன் குடாகம, கொட்கலை, தலவாக்கலை சென்கிளையார், ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் பனிமூட்டமும் காணப்படுகின்றது.
இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும், அவதானமாக வாகனத்தை செலுத்துமாறும், பனி மூட்டம் நிலவும் வேளையில் வானங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: மலைவாஞ்சன்
வவுனியா
வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் 931.2 மில்லி மீட்டர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஏப்ரல் மாதம் 356.4 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியே அதிக மழைவீழ்ச்சியாக பதியப்பட்டுள்ளது. கடந்த வருடம் 2021ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பெய்த மழைவீழ்ச்சி 667.1 மில்லி மீட்டராக காணப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒப்பிடும் போது கடந்த வருடத்தை விட
இவ்வருடமே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.