மேலும் வலுவடைந்து பாரிய சூறாவளியாக விருத்தியடையக்கூடிய யாஸ் சூறாவளி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது “யாஸ்” (YAAS) சூறாவளியாக வலுவடைந்து நேற்று அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 16.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.7E இற்கும் இடையில் மையம் கொண்டிருந்தது.
அது மேலும் வலுவடைந்து இன்று பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியானது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் மாலையளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுவதுடன், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
